கர்நாடகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 5.33 கோடி வாக்காளர்கள் உள்ளனர்


கர்நாடகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 5.33 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:46 PM GMT)

கா்நாடகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 5.33 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 3.89 லட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல், தகுதியான வாக்காளர்களை சேர்த்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியுடன் 18 வயதை பூர்த்தி அடைபவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா பெங்களூருவில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநில வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் மொத்தம் 5 கோடியே 5 கோடியே 33 லட்சத்து 77 ஆயிரத்து 162 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 68 லட்சத்து 2 ஆயிரத்து 838 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 65 லட்சத்து 69 ஆயிரத்து 428 பேரும், பிற வாக்காளர்கள் 4 ஆயிரத்து 896 பேரும் உள்ளனர்.

47 ஆயிரத்து 172 சேவை வாக்காளர்கள் இருக்கிறார்கள். மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெங்களூரு தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக 7 லட்சத்து 6 ஆயிரத்து 207 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தொகுதியில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 907 வாக்காளர்களும் உள்ளனர். 100 சதவீதம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. வாக்காளர்கள் இணையத்தில் இருந்து அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது இருந்த வாக்காளர்களை விட சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல்படி இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 45 ஆயிரத்து 707 ஆகம். பிற வாக்காளர்கள் 4 ஆயிரத்து 896 பேரும், மாற்றுத்திறனாளிகள் 5 லட்சத்து 66 ஆயிரத்து 777 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 93 பேரும் உள்ளனர்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு 973 பெண் வாக்காளர்களும். தற்போதைய நிலவரப்படி 991 பேரும் உள்ளனர். வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 58 ஆயிரத்து 834 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக 845 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 293 வாக்குச்சாவடிகள் பிற வாக்குச்சாவடிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி 552 புதிய வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

78 ஆயிரம் வாக்காளர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 5 லட்சத்து ஆயிரத்து 836 வாக்காளா்களின் விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 703 வாக்காளர்கள் மரணம் அடைந்ததை அடுத்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 38 ஆயிரத்து 617 வாக்காளர்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதனால் ஆகமொத்தம் வாக்காளர் பட்டியலில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 353 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி அளவில் தங்களின் ஏஜண்டுகளை நியமனம் செய்து தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான வாக்காளர்கள் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஸ்மார்ட் செல்போனில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யும் பணிகள் இன்று (நேற்று) முதலே மேற்கொள்ளலாம். இந்த பணி வருகிற டிசம்பர் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக நவம்பர் 18-ந் தேதி, 19-ந் தேதி, டிசம்பர் 2-ந் தேதி, 3-ந் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. மனுக்கள் சரிபார்க்கும் பணி டிசம்பர் 26-ந் தேதி நடைபெறும். அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு மனோஜ்குமார் மீனா கூறினார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story