பத்லாப்பூரில் மைத்துனியை கத்தியால் தாக்கி கொன்றவர் கைது- மனைவி, மாமியார் காயம்


பத்லாப்பூரில் மைத்துனியை கத்தியால் தாக்கி கொன்றவர் கைது- மனைவி, மாமியார் காயம்
x
தினத்தந்தி 30 Nov 2022 6:45 PM GMT (Updated: 30 Nov 2022 6:47 PM GMT)

பத்லாப்பூரில் மைத்துனியை கத்தியால் தாக்கி கொன்றவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மனைவி, மாமியார் காயமடைந்தனர்.

அம்பர்நாத்,

பத்லாப்பூரில் மைத்துனியை கத்தியால் தாக்கி கொன்றவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மனைவி, மாமியார் காயமடைந்தனர்.

கத்தியால் தாக்கினார்

மும்பை ஜோகேஸ்வரியை சேர்ந்தவர் முகமது ஹிம்மத் சேக் (வயது50). இவரது மனைவி நிலோபர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பத்லாப்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் முகமது ஹிம்மத் சேக் பத்லாப்பூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் சென்றார். வீட்டின் கதவை திறந்த நிலோபர் மீது அவர் கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதனை கண்ட நிலோபரின் சகோதரி சனோபர், தாய் பரிதா ஆகியோர் தடுக்க முயன்றனர். அவர்களையும் கத்தியால் தாக்கினார்.

மைத்துனி கொலை

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சனோபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் முகமது ஹிம்மத் சேக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த நிலோபர், தாய் பரிதாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சனோபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story