இணையதளங்களை முடக்க வலியுறுத்தி தேசியவாத காங். தலைவர்கள் போராட்டம்


இணையதளங்களை முடக்க வலியுறுத்தி தேசியவாத காங். தலைவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

சாவித்ரிபாய் புலே பற்றி ஆட்சேபனை கட்டுரை எழுதிய இணையதளங்களை முடக்க வலியுறுத்தி தேசியவாத காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

மும்பை,

சாவித்ரிபாய் புலே பற்றி ஆட்சேபனை கட்டுரை எழுதிய இணையதளங்களை முடக்க வலியுறுத்தி தேசியவாத காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

போராட்டம்

பிரபல சமூக சீர்திருத்தவாதியான சாவித்ரிபாய் புலே குறித்து ஆட்சேபனைக்குரிய கட்டுரைகளை இண்டிக்டெல்ஸ் மற்றும் இந்து போஸ்ட் என்ற 2 இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன.

இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அஜித்பவார், ஜெயந்த் பாட்டீல், சுனில் தாக்கரே, சகன் புஜ்பால் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே அந்த இணையதளங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட அந்த இணையதளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போலீஸ் கமிஷனருக்கு கடிதம்

மேலும் அஜித்பவார், ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடித்ததில், "பெண் கல்விக்கு முன்னோடியாக கருதப்படும் சாவித்ரிபாய் புலேவுக்கு எதிராக இண்டிக் டெல்ஸ் மற்றும் இந்து போஸ்ட் இணையதளங்கள் ஆட்சேபனைக்குரிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. மக்களை தூண்டிவிடும் நோக்கில் இந்த செயல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சந்திரபதி சிவாஜி மற்றும் சாகு, அம்பேத்கர் ஆகியோரை போல மராட்டியத்தில் சாவித்ரிபாய் புலேவை அவமதிக்கும் செயல் மிகவும் இழிவானது. இதற்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது.

இணையதளத்தை முடக்கவேண்டும்

அதேபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சகன் புஜ்பால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எழுதிய கடிதத்தில், "சாவித்ரிபாய் புலே குறித்து கட்டுரை வெளிட்ட இந்த இணையதளங்கள் வரலாற்றை மறுசீரமைக்கிறோம் என்ற பெயரில் வரலாற்றை அழித்து வருகிறது. இதுபோன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட இணையதளத்திற்கு தடை விதிப்பதுடன், அவதூறாக கட்டுரை எழுதியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

முதல்-மந்திரி அலுவலகம்

இந்தநிலையில் முதல்-மந்திரி அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "சாவித்ரிபாய் புலே மீதான ஆட்சேபனைக்குரிய கட்டுரைக்கு பல சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதையறிந்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அந்த இணையதளங்களில் உள்ள கட்டுரைகளை சரிபார்த்து, அதன்படி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முக்கிய அடையாளமான தலைவர்களை பற்றி எழுதும்போது, யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தாத வகையில் அவற்றை பற்றிய விரிவான ஆய்வுடன் மிகுந்த கவனத்துடன் எழுத்தவேண்டும் என முதல்-மந்திரி கூறியுள்ளார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story