குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி


குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 26 Oct 2023 7:18 AM GMT (Updated: 26 Oct 2023 8:59 AM GMT)

ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலியானார்.

திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பிரதாப் (வயது 30). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் பிரதாப் நண்பர் மனோகரன். இவர் புதிதாக வீடு கட்டினார்.

இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக நேற்று முன்தினம் மாலை பள்ளம் தோண்டும் பணியில் பிரதாப் ஈடுபட்டார். அப்போது பிரதாப் பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவர் அருகே பள்ளம் தோண்டி கொண்டிருந்தார். சுற்றுச்சுவர் பக்கத்தில் பள்ளம் தோண்டியதில் சுற்றுச்சுவருக்கான அஸ்திவாரம் பலம் இழந்தது. இதில் அந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து பள்ளம் தோண்டி கொண்டிருந்த பிரதாப் மீது விழுந்தது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இடிந்த சுவரை கடப்பாறையால் உடைத்து போராடி பிரதாபை மீட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரதாப் உயிருக்கு போராடினார்.

உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story