திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பாலாலயம்


திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பாலாலயம்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 7:00 AM GMT)

கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பலாலயம் பூஜை 5-ந்தேதி தொடங்குகிறது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாக உள்ள இந்த கோவிலில், கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

யாகசாலை அமைப்பு

இதற்கான திருப்பணிகள் தொடங்கும் முன்பு, கோவிலில் பாலாலயம் நடைபெறும். அதன்படி, தேவநாதசாமி கோவிலில் வருகிற 5-ந்தேதி(திங்கட்கிழமை) பாலாலயம் தொடங்கி, 7-ந்தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. இதற்காக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதில் 5-ந்தேதி மாலையில் பகவத் பிரார்த்தனை, புண்ணியாவாஜனம், பூர்ணாகுதி நடைபெறுகிறது. 6-ந்தேதி காலையில் புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், ஹோமம், பூர்ணாகுதியும், மாலையில் மகா சாந்தி யாகம், மகாசாந்தி திருமஞ்சனம், யாகம் நடைபெற உள்ளது. பின்னர் 7-ந்தேதி புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெறுகிறது.

கோவிலில் திருப்பணிகள்

தொடர்ந்து திருப்பணிகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளது. இதனால், கோவிலில் சாமி புறப்பாடு மற்றும் உற்சவங்கள் நடைபெறாது. தொடர்ந்து கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, திருப்பணிகள் முடியும் நிலையில் தான் அதுபற்றிய விவரம் தெரியவரும் என்று தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story