கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தீபாவளி போனஸ் கேட்டு கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கூட்டுறவு நூற்பாலை

ஆவுடையார்கோவிலை அடுத்த துரையரசபுரத்தில் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தநிலையில், தீபாவளி போனஸ் வழங்கக்கோரி நூற்பாலை முன்பு நேற்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராதா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் அசோகன் சிறப்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ், இனிப்பு, பலகாரங்கள் மற்றும் பண்டிகைகால அட்வான்ஸ் வழங்க வேண்டும். நிரந்தர தொழிலாளி, தின கூலி தொழிலாளி என்று பாகுபாடு இன்றி வழக்கம்போல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா, பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் கர்ணா, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்வாரிய ஊழியர்கள்

இதேபோல் தீபாவளி பண்டிகையையொட்டி 25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் மின்வாரிய ஊழியர்கள் புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) மாவட்ட தலைவர் சித்தையன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை ஆதரித்து சி.ஐ.டி.யு. பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகையையொட்டி 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். 1.12.2019-க்கு பிறகு பணியில் சேர்ந்த கேங்மேன் தொழிலாளர்களுக்கு 6 சதவீத விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வாரிய கமிட்டி பரிந்துரை செய்த 5 கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களுக்கு மின்வாரியமே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.


Next Story