யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு: கிருஷ்ணகிரியில் சோகம்


யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு: கிருஷ்ணகிரியில் சோகம்
x

கிருஷ்ணகிரியில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள அலசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா (வயது 42). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு அருகில் கட்டி வைத்திருந்த கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த காட்டு யானை திடீரென திம்மராயப்பாவை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று காலை யானை தாக்கி திம்மராயப்பா இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் மட்டும் யானைகள் தாக்கி 4 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை தாக்கி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். யானைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story