மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்


மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்
x

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சித்தலூர், பானையங்கால், ஒகையூர், அசகளத்தூர், நாகலூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3,500 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். தற்போது நன்கு வளர்ந்து வந்த நிலையில் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேளாண் உதவி இயக்குனர் சந்துரு தலைமையிலான அதிகாரிகள் பானையங்கால் மற்றும் சித்தலூர் கிராமத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த விவசாயிகளிடம் கூறுகையில், கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு இல்லாமல் பகல் நேர வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.

பயிரின் வளர்ச்சி பருவம்

இதனால் படைப்புழு தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாத்துக்கொள்ள ஆரம்ப நிலை பயிர்களுக்கு குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 எஸ்.சி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.4 மில்லியும், ப்ளுபெண்டிமைட் 48 எஸ்.சி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மில்லியும், 15 முதல் 20 நாட்களான பயிர்களுக்கு அசாடிராக்டின் (1500பி.பி.எம்.) மருந்தைஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லியும், 40 முதல் 45 நாட்களான பயிர்களுக்கு எமாமெக்டின் பெனசோயேட் 5 எஸ்.ஜி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.4 கிராம், ஸ்பினிடிடோரம் 11.7 எஸ்.சி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மில்லியும், நோவாலூரான் 10 இ.சி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லியும் கலந்து பயிரின் வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என்றனர். இந்த ஆய்வின் போது வேளாண் அலுவலர் வனிதா, உதவி வேளாண்மை அலுவலர் துரைராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story