பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் பெற்றோர் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் பெற்றோர் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2023 8:09 PM GMT (Updated: 31 Jan 2023 6:29 AM GMT)

பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் பெற்றோர் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் போலீசார் சார்பில் காணொலி தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெரம்பலூர் அரசு மருத்துவமனை டாக்டர் பூபதி கூறுகையில், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால், அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் எடை குறைதல், ரத்த சோகை, ரத்த அழுத்தம், குறை பிரசவம், குறை பிரசவத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பெண்களுக்கு திருமண வயது வந்தபிறகே பெற்றோர் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா கூறுகையில், அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 புதுமை பெண்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது. எனவே பெண் குழந்தை திருமணத்தை தடுப்போம், என்று கூறியிருந்தார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கூறுகையில், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்தால், மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் பெற்றோர், பெண்ணின் பெற்றோர், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், திருமணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தை 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தகவல், புகார் தொிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story