வாழ்க்கையில் வெற்றிபெறசெய்தித்தாள் படிக்கும் பழக்கத்தைமாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்:கலெக்டர் செந்தில்ராஜ்

வாழ்க்கையில் வெற்றிபெற செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் வெற்றிபெற செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
கலந்துரையாடல்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூண்டில் மாணவர் இயக்கம் சார்பில் கடலோர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சகேஷ் சந்தியா வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் ஆளுமை திறனை மேம்படுத்தும் நோக்கில், தூண்டில் மாணவர் இயக்கம் கடலோர பள்ளி மாணவ, மாணவிகளை (9-ம் வகுப்பு செல்லும் மாணவ, மாணவிகள்) ஒருங்கிணைத்து, அவர்களுக்கு ஆளுமை பயிற்சி வழங்குவதோடு, அரசுப்பணியின் முக்கியத்துவம் குறித்தும், அரசுத் துறைகளின் வகைகள், ஒவ்வொரு அரசுத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், அரசுப் பணியில் பணியாற்ற வேண்டுமென்றால் அதற்காக வழிமுறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்தும், அந்த போட்டித் தேர்வுகளுக்கான கல்வித்தகுதி, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
செய்தித்தாள் படிக்க வேண்டும்
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்புகள், தங்களது கிராமங்களில் அடிப்படைதேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகங்கள் மற்றும் பிரதிநிதிகள், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, நவீன தொழில் நுட்ப வளர்ச்சி, தூத்துக்குடி மாவட்டத்தின் தொன்மையான நாகரிகம் உள்ளிட்டவற்றை மாணவர்கள் ஒவ்வொருவரும் படித்து தெரிந்து கொள்ளவேண்டும். மாணவர்கள் பள்ளிபருவத்தில் படிப்பில் மிகுந்தகவனம் செலுத்தவேண்டும். அன்றாட நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும். தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
வெற்றி நிச்சயம்
இதன் வாயிலாக பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள முடியும். போட்டித்தேர்வுகளில் மிகவும் முக்கிய அங்கமாக இருப்பது இந்த பொதுஅறிவு. ஆகையால், மாணவர்கள் பள்ளிப் பருவத்தில்இருந்தே நூலகம் சென்று புத்தகம் வாசிப்பது, செய்தித்தாள் வாசிப்பது, அன்றாட நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்வது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை தவறாமல் கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம'் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் 11 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 50 பள்ளி மாணவ, மாணவிகள், 15 தன்னார்வ தொண்டர்களும் கலந்து கொண்டனர்.