தூதரக தாக்குதல்.. ஈரான் எச்சரிக்கை எதிரொலி: உஷார் நிலையில் இஸ்ரேல் ராணுவம்


தூதரக தாக்குதல்.. ஈரான் எச்சரிக்கை எதிரொலி: உஷார் நிலையில் இஸ்ரேல் ராணுவம்
x
தினத்தந்தி 12 April 2024 7:57 AM GMT (Updated: 12 April 2024 8:21 AM GMT)

காசாவில் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகள் மீதான அதிருப்தி இருந்தபோதிலும், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஜெருசலேம்:

இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்தும் தாக்குதல் பிராந்திய அளவிலான பதற்றத்தை தூண்டி உள்ளது. குறிப்பாக, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஆதரவு அமைப்புகள் களமிறங்கி உள்ளதால் இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் உருவாகி உள்ளது.

இதற்கிடையே சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரக வளாகம் கடந்த 1-ம் தேதி குண்டு வீசி தாக்கப்பட்டது. இதில் தூதரகத்தில் இருந்த ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர், சிரியாவைச் சேர்ந்த 4 பேர், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தது.

ஆனால் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அத்துடன் ஈரான் நாட்டில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரானை நேரடியாக தாக்குவோம் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் கட்ஸ் பதிலடி கொடுத்தார். அத்துடன் ஈரான் தாக்குதலை முறியடிக்கும் வகையில் இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பை பலப்படுத்தியது. போர் முன்களப் பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கான விடுமுறையை நிறுத்தி வைத்துள்ளது.

இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தப்போவதாக ஈரான் அச்சுறுத்துகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் தெரிவித்து உஷார்படுத்தி உள்ளார். காசாவில் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகள் மீதான அதிருப்தி இருந்தபோதிலும், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு இரும்பு கவசம் போன்று ஆதரவை அளிப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பைடன் கூறியிருக்கிறார்.

இதையடுத்து இஸ்ரேல் தனது படைகளை உஷார்படுத்தி உள்ளது. மத்திய இஸ்ரேலில் உள்ள விமான தளத்திற்கு சென்ற நெதன்யாகு, பல முனைகளில் இருந்து வரும் சவால்கள் மற்றும் அவற்றை சமாளிக்கும் விதம் குறித்து அதிகாரிகளிடம் பேசினார்.

"காசாவில் முழு வீச்சில் நீடிக்கும் போரின் நடுவில், மற்ற பகுதிகளில் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும் தயாராகி வருகிறோம்" என நெதன்யாகு கூறியிருக்கிறார்.

இந்நிலையில், மோதலை தவிர்க்கும்படி பிற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஈரானும் இஸ்ரேலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என ரஷியா கேட்டுக்கொண்டுள்ளது. பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும்படி ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியிடம் ஜெர்மன் வெளியுறவு மந்திரி அன்னாலெனா பேர்பாக் வலியுறுத்தினார். இதேபோல் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரிகளும் கூறியுள்ளனர்.

அப்போது, "தூதரக அதிகாரிகள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பை இஸ்ரேல் மீறும்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதைக் கண்டிக்கத் தவறினால், எங்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு அவசியம் என்று ஈரான் வெளியுறவு மந்திரி பதில் கூறியிருக்கிறார்.

மேலும் ஈரானுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டதை சனிக்கிழமை வரை நீட்டிப்பதாக லூப்தான்சா நிறுவனம் கூறியுள்ளது.

இவ்வாறு இரு தரப்பிலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் பதற்றம் உருவாகி உள்ளது.


Next Story