இந்தியா- வங்காளதேசம் முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி நடக்கிறது


இந்தியா- வங்காளதேசம் முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி நடக்கிறது
x

இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி நடக்கிறது.

புதுடெல்லி,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதன்படி இந்தியாவின் இன்னிங்சை கேப்டன் ஷிகர் தவானும், சுப்மான் கில்லும் தொடங்கினர். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சீதோஷ்ண நிலையை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். சுப்மான் கில் 13 ரன்னிலும், கேப்டன் தவான் 28 ரன்னிலும் (45 பந்து) ஆடம் மில்னேவின் வேகத்தில் சரிந்தனர். மிடில் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யரை (49 ரன், 59 பந்து, 8 பவுண்டரி) தவிர்த்து சூர்யகுமார் யாதவ் (6 ரன்), ரிஷப் பண்ட் (10 ரன்), தீபக் ஹூடா (12 ரன்) ஆகியோர் தாக்குப்பிடிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் 146 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய இந்திய அணியை தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மீட்டெடுத்தார். சுந்தரின் நேர்த்தியான பேட்டிங் அணி 200 ரன்களை கடக்க உதவியது. ஒரு நாள் போட்டியில் தனது முதலாவது அரைசதத்தை நிறைவு செய்த சுந்தர் 51 ரன்களில் (64 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி விக்கெட்டாக கேட்ச் ஆனார்.

இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, டேரில் மிட்செல் தலா 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது டிவான் கான்வே 38 ரன்களுடனும், கேப்டன் வில்லியம்சன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். பின் ஆலென் 57 ரன்களில் (54 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) உம்ரான் மாலிக்கின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இடைவிடாது மழை கொட்டியதால் ஆட்டத்தை மேற்கொண்டு தொடர முடியவில்லை. ஒரு நாள் போட்டியில் 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி முடிவை அறிய 2-வது பேட்டிங்கில் குறைந்தது 20 ஓவர்கள் முடிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்னும் 2 ஓவர் பந்து வீசப்பட்டிருந்தால் நியூசிலாந்துக்கு சாதகமாக முடிவு கிடைத்திருக்கும். ஏனெனில் 20 ஓவர்களில் அந்த அணிக்கு 98 ரன்களே தேவையாக இருந்தது. பலத்த மழை காரணமாக ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

தோல்வியின் பிடியில் சிக்கி இருந்த இந்திய அணி அதிர்ஷ்டவசமாக வருணபகவானின் கருணையால் தப்பியது. ஏற்கனவே 2-வது ஒரு நாள் போட்டியும் இதே போன்று மழையால் பாதியில் ரத்தானது. அதே சமயம் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இந்த தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக 20 ஓவர் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.

அடுத்து வங்காளதேசம் செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி மிர்புரில் நடக்கிறது.

இந்திய அணி வீரர்கள் விவரம்:- ரோஹித் சர்மா (சி), கேஎல் ராகுல் (விசி), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன் , ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர். , ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.

வங்கதேச அணி வீரர்கள் விவரம்:- தமிம் இக்பால் (சி), அபிஃப் ஹொசைன், யாசிர் அலி, முஷ்பிகுர் ரஹீம், நஜ்முல் ஹொசைன், லிட்டன் தாஸ், அனாமுல் ஹக், நூருல் ஹசன், ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன், மஹ்முதுல்லா, முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் மஹ்முத்ஸ், இ. , நசும் அகமது


Next Story