ஒரு வருடத்தில் டி20 போட்டியில் அதிக வெற்றிகள்: இந்திய அணி உலக சாதனை


ஒரு வருடத்தில் டி20 போட்டியில் அதிக வெற்றிகள்: இந்திய அணி உலக சாதனை
x

இன்றைய வெற்றி இந்த வருடத்தில் இந்திய அணியின் 21-வது டி20 போட்டி வெற்றியாகும்.

ஐதராபாத்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இன்றைய வெற்றி இந்த வருடத்தில் இந்திய அணியின் 21-வது சர்வதேச டி20 போட்டி வெற்றியாகும்.

கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்து இருந்தது. பாகிஸ்தான் அணி கடந்த வருடம் 20 டி20 போட்டிகளில் வெற்றிகளை பெற்று இருந்ததே ஒரு அணி ஒரு வருடத்தில் பெற்ற அதிக டி20 வெற்றிகள் ஆகும்.

இந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் விளையாடியுள்ள 28 டி20 போட்டிகளில் இந்திய அணியின் 21-வது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story