ஐ.பி.எல்.: 2 இடங்கள்...5 அணிகள் போட்டி...பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போவது எவை..?


ஐ.பி.எல்.: 2 இடங்கள்...5 அணிகள் போட்டி...பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போவது எவை..?
x
தினத்தந்தி 15 May 2024 3:19 PM GMT (Updated: 15 May 2024 3:37 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை 2 அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன.

சென்னை,

அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்னும் 5 லீக் போட்டிகளே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதேவேளை மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன.

மீதமுள்ள 2 இடங்களுக்கு நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற என்ன நடக்க வேண்டும்? என்பதை பார்க்கலாம்.....

டெல்லி கேப்பிடல்ஸ்:

14 லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலா 7 வெற்றி மற்றும் தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து டெல்லி பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நூழிலையில் தொங்கி கொண்டுள்ளது. இருப்பினும் அந்த அணியின் ரன் ரேட் மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது 2 லீக் போட்டிகளிலும் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும். மேலும் பெங்களூரு அணியும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும். இதனால் டெல்லி அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது என்று சொல்லலாம் .இருப்பினும் ஏதாவது மாயாஜாலம் நிகழ்ந்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 1 லீக் போட்டி எஞ்சி இருந்தாலும் அதில் இமாலய வெற்றி பெற்று ரன் ரேட்டை உயர்த்த வேண்டும். மேலும் ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் முறையே தங்களது ஆட்டங்களில் தோல்வியடைய வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் அதில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். தோல்வி அடையும் பட்சத்தில் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இருப்பினும் அந்த அணியின் ரன் ரேட் நல்ல நிலையில் உள்ளதால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

நடப்பு சீசனின் ஆரம்பத்தில் தோல்விகளால் துவண்டு போன பெங்களூரு அணி, கடைசி 5 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மாறாக சேசிங் செய்தால் 18.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பெங்களூரு அணி பிளே ஆப் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் 14 புள்ளிகள் மற்றும் நல்ல ரன் ரேட்டுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பெங்களூருக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை அணி 6-வது கோப்பையை நெருங்கும். மாறாக தோல்வியடையும் பட்சத்தில் ஐதராபாத் அணியின் முடிவை பொறுத்து பிளே ஆப் செல்லுமா? இல்லையா? என்பது தெரியவரும். இருப்பினும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவே அதிக வாய்ப்பு உள்ளது.


Next Story