வீரர்களுக்கு மட்டுமல்ல...மைதான ஊழியர்களுக்கும் பரிசுத்தொகை அறிவித்த ஜெய் ஷா


வீரர்களுக்கு மட்டுமல்ல...மைதான ஊழியர்களுக்கும் பரிசுத்தொகை அறிவித்த ஜெய் ஷா
x

ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்த உதவிய மைதான ஊழியர்களுக்கு ஜெய் ஷா பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 2 மாத காலமாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த இந்த தொடர் கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் சென்னையில் நடந்த மாபெரும் இறுதிப்போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றது.

அந்த வகையில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தாவுக்கு 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. தோல்வியை சந்தித்த ஐதராபாத்துக்கு 12.50 கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. அது போக ஆரஞ்சு தொப்பி வென்ற விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்த உதவிய மைதானங்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அதன் படி இறுதிப்போட்டி நடைபெற்ற சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஐதராபாத், முல்லான்பூர், பெங்களூரு, ஜெய்ப்பூர், லக்னோ, குஜராத் ஆகிய 10 முதன்மை மைதானங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

அத்துடன் விசாகப்பட்டினம், கவுகாத்தி, தர்மசாலா ஆகிய 3 நகரங்களில் உள்ள மைதானங்களில் கணிசமான போட்டிகள் நடைபெற்றன. அந்த 3 மைதானங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை கொடுக்கப்படுவதாகவும் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்காக பாடுபட்ட மைதான ஊழியர்களை பாராட்டும் வகையில் இந்த பரிசுத்தொகை கொடுக்கப்படுவதாகவும் ஜெய் ஷா கூறியுள்ளார்.


Next Story