தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் குறித்து பேசிய ரவி சாஸ்திரி


தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் குறித்து பேசிய ரவி சாஸ்திரி
x

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கம்பீர் குறித்து ரவி சாஸ்திரி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக 2 கோப்பைகளை வென்று கொடுத்த அவர், இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக செயல்பட்டு கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இதனால் அவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கம்பீர் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் விளையாடியவர். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. இளம் வயதான அவரிடம் ஏகப்பட்ட புதிய ஐடியாக்கள் இருக்கின்றன. அதனால் அவர் நிச்சயம் இந்திய அணியை பெரிய இடத்திற்கு கொண்டு செல்வார். அவரது பதவி நியமனம் அணிக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கம்பீரை எங்களுக்கு நன்றாக தெரியும். அவர் சிறந்த ஐடியாக்களை கொண்டிருப்பவர். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் தற்போது உள்ள அணி ஒரு முதிர்ச்சியான அணி. அந்த வீரர்களை வைத்து ஒரு வலுவான அணியை உருவாக்க முடியும். நிச்சயம் இந்திய அணி அவரது பயிற்சியில் சிறப்பாக செயல்படும்" என்று கூறினார்.


Next Story