இந்த இந்திய இளம் வீரர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டுள்ளார் - ஆஷிஸ் நெஹ்ரா


இந்த இந்திய இளம் வீரர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டுள்ளார் - ஆஷிஸ் நெஹ்ரா
x
தினத்தந்தி 3 Dec 2023 12:24 PM GMT (Updated: 3 Dec 2023 12:36 PM GMT)

ரிங்கு சிங் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முதல் முறையாக அணிக்கு தேர்வாகியுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமான அயர்லாந்து தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார். அதைத்தொடர்ந்து 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமான காலிறுதியில் சூப்பர் பினிஷிங் கொடுத்து இந்தியா தங்கப்பதக்கம் வெல்வதற்கு உதவிய அவர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலுமே அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

இதுவரைஇந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே முழுவதுமாக விளையாடி வரும் ரிங்கு சிங் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் தேர்வாகியுள்ளார். எனவே இவர் டி20 பிளேயராக மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் 50க்கும் ஏற்பட்ட சராசரியை வைத்துள்ள ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக ஆஷிஸ் நெஹ்ரா பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- " ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 ஆட்டத்தில் தொடக்கத்திலேயே அவர் பேட்டிங் செய்ய வந்தது மிகவும் நல்லதாகும். ஏனெனில் இதற்கு முன் அவர் 16, 17, 18 போன்ற ஓவர்களில் களமிறங்கி வெற்றிகரமாக விளையாடியதை அதிக முறை பார்த்துள்ளோம். ஒருவேளை அந்த ஆட்டத்தில் ரிங்கு அவுட்டாகியிருந்தால் இந்தியா 160 ரன்களுடன் நின்றிருக்கும். இந்த நேரத்தில் ரஞ்சி கோப்பையில் அவர் 50 சராசரியை கொண்டுள்ளார் என்பதை மறந்து விடாதீர்கள். அதனாலேயே அவரிடம் ஏதோ ஒரு திறமையை பார்த்த தேர்வு குழுவினர் 50 ஓவர் அணியில் முதல் முறையாக தேர்வு செய்துள்ளார்கள். அது இந்திய அணிக்கு பலமாக அமையும். ஏனெனில் 4வது டி20 போட்டியில் முன்கூட்டியே களமிறங்கிய அவர் தம்மால் நிதானமாக நின்று கடினமான சூழ்நிலைகளை சமாளித்து வெற்றிகரமாக விளையாட முடியும் என்பதை காட்டினார்" என்று கூறினார்.


Next Story