சச்சினின் உலக சாதனையை முறியடிப்பீர்களா..? ஜோ ரூட் பதில்


சச்சினின் உலக சாதனையை முறியடிப்பீர்களா..? ஜோ ரூட் பதில்
x

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் ஜோ ரூட் 8-வது இடத்தில் உள்ளார்.

லண்டன்,

நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் சுமித் ஆகியோருடன் ஜோ ரூட்டும் உலகின் டாப் 4 சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அதிலும் விராட் கோலி, வில்லியம்சன், ஸ்மித் ஆகியோரை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் அவர் இதுவரை 142 போட்டிகளில் 11940* ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளார்.

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜொலிக்கும் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை அவர் முறியடிக்கும் வாய்ப்புள்ளது. தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் இன்னும் 5,000 ரன்கள் அடித்தால் 15921 ரன்கள் குவித்துள்ள சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைக்க முடியும். எனவே வருங்காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் இந்த உலக சாதனையை அவர் உடைப்பார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சச்சினின் உலக சாதனையை நீங்கள் முறியடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு:-

"அதை செய்வது நன்றாக இருக்கும். ஆனால் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்? இது போன்ற பேச்சுகளுக்குப் பின் நான் பார்மை இழக்கலாம். உண்மையில் அடுத்த சில போட்டிகளில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. எனவே தொடர்ந்து நான் வேலை செய்ய வேண்டும். இந்தியாவின் நாக்பூரில் அறிமுகப் போட்டியில் களமிறங்கியபோது இந்த உச்சத்தை எட்டுவேன் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் விளையாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டாப் 7 இடங்களில் உள்ள வீரர்கள் அற்புதமானவர்கள்" என்று கூறினார்.


Next Story