13-வது தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்


13-வது தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x

தமிழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான நேற்று கால்இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. காலையில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடகா-ஜார்கண்ட் அணிகள் மோதின. இதில் கர்நாடக அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது.

மற்றொரு கால்இறுதியில் தமிழ்நாடு-உத்தரபிரதேசம் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் உத்தரபிரதேச வீரர்கள் மனிஷ் சஹானி 27-வது நிமிடத்திலும், சுனில் யாதவ் 30-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் வலைக்குள் பந்தை திணித்தனர். இதனால் முதல் பாதியில் உத்தரபிரதேசம் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் தமிழக அணியினர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்தனர். 33-வது நிமிடத்தில் சுந்தரபாண்டியும், 52-வது நிமிடத்தில் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லியும் கோலடித்தனர். இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. 59-வது நிமிடத்தில் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி மீண்டும் கோலடித்து முன்னிலை தேடிக்கொடுத்தார். முடிவில் தமிழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

அரியானா-ஒடிசா அணிகள் மோதிய இன்னொரு கால்இறுதி ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் (டிரா) முடிந்தது. இதைத்தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட்-அவுட்டில் நடப்பு சாம்பியன் அரியானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை சாய்த்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு கால்இறுதியில் பஞ்சாப்-மணிப்பூர் அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்து அரைஇறுதியை எட்டியது.

இந்த போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு-அரியானா (பிற்பகல் 1.30 மணி), கர்நாடகா-பஞ்சாப் (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story