ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஆக்கி; 2-வது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி


ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஆக்கி; 2-வது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

தினத்தந்தி 1 Dec 2023 11:01 AM GMT (Updated: 1 Dec 2023 12:18 PM GMT)

இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் நாளை பெல்ஜியம் அணியுடன் மோத உள்ளது.

சான்டியாகோ,

ஜூனியர் பெண்களுக்கான 10-ஆவது உலகக்கோப்பை ஆக்கி போட்டி, சிலியில் நேற்று தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி, 12 நாள்கள் நடைபெற்று டிசம்பர் 10-ஆம் தேதி நிறைவடைகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் குரூப் "சி'-யில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கனடா அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜெர்மனி அணியுடன் மோதியது. இதில் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து 4-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்திய அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்திய அணி தரப்பில் அன்னு, ரோப்னி குமாரி, மும்தாஜ் கான் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். லாரா ப்ளூத் 2 கோல்களும், சோபியா ஸ்க்வாபே மற்றும் கரோலின் சீடி தலா 1 கோலும் அடித்து ஜெர்மனி அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்நிலையில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் நாளை பெல்ஜியம் அணியுடன் மோத உள்ளது.


Next Story