தேசிய ஆக்கி போட்டி: தமிழக அணிக்கு 3-வது இடம்


தேசிய ஆக்கி போட்டி: தமிழக அணிக்கு 3-வது இடம்
x

பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் தமிழக அணி 5-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை சாய்த்து 3-வது இடத்தை பெற்றது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 12 நாட்களாக நடந்து வந்தது.

இதில் நேற்று மாலை நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணி, நடப்பு சாம்பியன் அரியானாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட் மூலம் பஞ்சாப் அணி 9-8 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. அரியானா 2-வது இடத்துடன் திருப்தி கண்டது.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. தமிழக அணி தரப்பில் சோமன்னா (4-வது நிமிடம்), சுந்தரபாண்டி (40-வது நிமிடம்), கார்த்தி செல்வம் (52-வது நிமிடம்) தலா ஒரு கோலும், கர்நாடகா தரப்பில் கேப்டன் கவுடா ஷிஷி (12-வது நிமிடம்), ஹரிஷ் முதாகர் (34-வது நிமிடம்), ரஹீம் முசீன் (38-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

இதைத்தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட்-அவுட்டில் தமிழக அணியில் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி, கனகராஜ் செல்வராஜ், தனுஷ், சுந்தரபாண்டி, ஷியாம் குமார் ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக்கினர். தமிழக அணியின் கோல்கீப்பர் செந்தமிழ் அரசு, கர்நாடக அணியினரின் 2 முயற்சிகளை முறியடித்து வெற்றியை உறுதி செய்தார். பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் தமிழக அணி 5-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை சாய்த்து 3-வது இடத்தை பெற்றது.


Next Story