என்னை ஒரு சாம்பியனாக நான் இன்னும் நினைக்கவில்லை - அல்காரஸ்


என்னை ஒரு சாம்பியனாக நான் இன்னும் நினைக்கவில்லை - அல்காரஸ்
x

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அல்காரஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' வகை போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் கடந்த இரு வாரமாக லண்டனில் நடந்து வந்தது. பெண்கள் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 3-ம்நிலை வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), முன்னாள் சாம்பியனான 2-ம்நிலை வீரர் நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்த்து மல்லுக்கட்டினர்.

2 மணி 27 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் அல்காரஸ் 6-2,6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார்.

21 வயதான அல்காரஸ் ருசித்த 4-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே பிரெஞ்சு ஓபன் (2024-ம் ஆண்டு), விம்பிள்டன் (2023), அமெரிக்க ஓபன் (2022) ஆகியவற்றை தலா ஒரு முறை வென்று இருக்கிறார். 'ஓபன் எரா' வரலாற்றில் (1968-ம் ஆண்டில் இருந்து) ரோஜர் பெடரருக்கு அடுத்து தனது முதல் 4 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியிலும் தோல்வியே சந்திக்காமல் மகுடம் சூடிய 2-வது வீரர் என்ற சிறப்பை அல்காரஸ் பெற்றுள்ளார். அல்காரசுக்கு ரூ,29¼ கோடி பரிசுத்தொகையுடன், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.

வெற்றிக்கு பின் அல்காரஸ் கூறுகையில், "இது மிகவும் அழகான தொடர். அழகான மைதானம். அழகான கோப்பை. இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்பது கனவு. ஒரே ஆண்டில் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் இரண்டு பட்டங்களை வென்ற சாதனையாளர்களின் பட்டியலில் நானும் இணைந்திருப்பது மிகப்பெரிய கவுரவம். அவர்கள் எல்லாம் மிகப்பெரிய சாம்பியன்கள். அவர்களை போல் என்னை ஒரு சாம்பியனாக நான் இன்னும் நினைக்கவில்லை. ஆனால் எனது இந்த டென்னிஸ் பயணத்தை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்"என்று கூறினார்.


Next Story