நிரந்தர வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்


நிரந்தர வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்
x
தினத்தந்தி 29 Jan 2023 1:30 AM GMT (Updated: 29 Jan 2023 1:30 AM GMT)

பட்டுப்புழு கூடாரம், தேவையான கருவிகள் என அனைத்துக்கும் ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஒரு முறை முதலீடு செய்வது போதுமானது. பட்டுப்புழு வளர்ப்புக்கு சுத்தமான சுற்றுச்சூழலும், சீரான சீதோஷ்ண நிலையும் அவசியம்.

பெண்கள் முழு நேரம் அல்லது பகுதி நேரத் தொழிலாக செய்து, வருமானம் ஈட்டக்கூடிய சுய தொழில்களில் ஒன்று 'பட்டுப்புழு வளர்ப்பு'. இதில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும், நிலையான வருமானத்தைப் பெற முடியும். பெண்கள் பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளும், சில தனியார் நிறுவனங்களும் சிறப்பு பயிற்சி அளிக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொண்டால், பட்டுப் புழு வளர்ப்பு தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

பட்டுப்புழு கூடாரம், தேவையான கருவிகள் என அனைத்துக்கும் ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஒரு முறை முதலீடு செய்வது போதுமானது. பட்டுப்புழு வளர்ப்புக்கு சுத்தமான சுற்றுச்சூழலும், சீரான சீதோஷ்ண நிலையும் அவசியம்.

எஸ் 35 பட்டுப்புழு அல்லது வி1 வகை பட்டுப்புழுக்களை எளிதாக வளர்க்கலாம். இதற்கு பெரிய அளவில் இடம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்குக் கிடைக்கும் இடத்தின் அளவைப் பொறுத்து, பட்டுப்புழு வளர்ப்பு முறையைத் தேர்வு செய்யலாம்.

பட்டுப்புழுவுக்கு உணவாகும் மல்பெரி செடி வளர்ப்புக்கு ஏற்றவாறு சொட்டுநீர்ப் பாசனம் அமைப் பதற்கு இணை வரிசை நடவு முறையை (90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ) பின்பற்றலாம். இது இடை உழவு செய்வதற்கும், எளிதாக அறுவடை செய்வதற்கும் ஏற்றதாக இருப்பதுடன், ஈரப்பதம் குறைவதையும் தடுக்கும்.

ஒரு வருடத்தில் தொழு உரத்தை 2 முறையும், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை 5 முறையும் உரமாக இட வேண்டும். 80 முதல் 120 மில்லி மீட்டர் அளவில் வாரம் ஒரு முறை நீர் பாசனம் செய்யலாம். தினமும் மூன்று முறை புழுக்களுக்கு உணவு அளிக்க வேண்டும். 80 நாட்கள் இடைவெளியில், வருடத்துக்கு 5 முதல் 10 முறை வரை அறுவடை செய்யலாம்.

அரசு, மூன்று நிலையான பட்டுப்புழு வளர்ப்பு அமைப்புக்கு ரூ.63 ஆயிரம் முதல் 87 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. மேலும், அரசின் திட்டம் மூலமாகவும் வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.

பட்டுப்புழுவை பாதிக்கும் நோய்கள்

வருடம் முழுவதும் புழுக்களை வளர்ப்பதாலும், காலத்துக்கு ஏற்றபடி மாறும் சீதோஷ்ண நிலையின் காரணமாகவும், பட்டுப்புழு எளிதாக நோய்க்கிருமிகளால் தாக்கப்படும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பெப்ரைன் நோய்கள் பட்டுப்புழுவை அதிகம் தாக்கும். வைரசால் ஏற்படும் 'கிராஸரி நோய்' பட்டுப்புழுவை வெகுவாகப் பாதிக்கும். இது புழுவின் தோலில் மினுமினுப்பையும், எண்ணெய்த் தன்மையையும் உண்டாக்கும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட புழுக்கள், ஒரே இடத்தில் இருக்காமல் அங்கும் இங்கும் நகர்ந்துக்கொண்டே இருக்கும். கால்கள் பிடிமானத்தை இழந்து புழுக்கள் தலைகீழாகத் தொங்கத் தொடங்கும். புழுக்களின் தோல் மெலிந்து, வெள்ளை நிற திரவம் வெளியாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட புழுக்கள் 7 நாட்களில் உயிரிழக்கும். இதனால் லாபம் வெகுவாகக் குறையும்.


Next Story