வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்


வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்
x
தினத்தந்தி 25 Dec 2022 1:30 AM GMT (Updated: 25 Dec 2022 1:30 AM GMT)

பிரேசில் நாட்டில் கோடைகாலத்தில் புத்தாண்டு பிறப்பதால் பெரும்பாலான மக்கள் கடற்கரையில் கொண்டாடுவார்கள். நள்ளிரவுக்குப் பிறகு வெள்ளை ஆடை அணிந்து கடற்கரையில் நின்று ஏழு அலைகளைக் கடந்தால், நினைத்தது நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. புத்தாண்டு தினத்தில் ‘தண்ணீர் தெய்வமான யெமஞ்சா’விற்கு மரியாதை செலுத்துவது அவர்களின் பாரம்பரியம்.

புத்தாண்டின் தொடக்கத்தை உலகம் முழுவதும் பல்வேறு விதங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர். ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் தங்கள் மரபுப்படி புத்தாண்டை வரவேற்கின்றனர். அந்தவகையில் சில வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

அமெரிக்கா:

டைம்ஸ் சதுக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று நள்ளிரவில் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய அளவு பந்தை உயரமான கம்பத்தில் இருந்து கீழே விழச் செய்வார்கள். 1907-ம் ஆண்டின் இறுதியில், 1908-ம் ஆண்டை வரவேற்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் உரிமையாளர் அடால்ப் ஓக்ஸ் இந்நிகழ்வை உருவாக்கினார். அதன்பின்னர், ஆண்டுதோறும் இந்நிகழ்வை மக்களே சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

பிரேசில்:

பிரேசில் நாட்டில் கோடைகாலத்தில் புத்தாண்டு பிறப்பதால் பெரும்பாலான மக்கள் கடற்கரையில் கொண்டாடுவார்கள். நள்ளிரவுக்குப் பிறகு வெள்ளை ஆடை அணிந்து கடற்கரையில் நின்று ஏழு அலைகளைக் கடந்தால், நினைத்தது நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. புத்தாண்டு தினத்தில் 'தண்ணீர் தெய்வமான யெமஞ்சா'விற்கு மரியாதை செலுத்துவது அவர்களின் பாரம்பரியம்.

ஸ்பெயின்:

கடிகாரத்தின் ஒவ்வொரு மணியையும் குறிக்கும் வகையில், புத்தாண்டு தினத்தன்று 12 திராட்சை பழங்களை சாப்பிடுவது ஸ்பெயின் நாட்டு மக்களின் வழக்கமாகும். இதனால் வளமும், அதிர்ஷ்டமும் உண்டாகும் என்பது அவர்களின் நம்பிக்கை. திராட்சைகள் அனைத்தையும் சில நொடிகளில், சாப்பிட்டு முடித்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பார்கள்.

ஜப்பான்:

பழைய ஆண்டில் இருந்து விலகி புது ஆண்டுக்குள் அடி எடுத்து வைக்கும் பொருட்டு, புத்தாண்டு தினத்தில் ஜப்பானியர்கள் சூடான நூடுல்ஸை சாப்பிடுகின்றனர். இது புதிய ஆண்டில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

பிரான்ஸ்:

ஷாம்பெயின் ஒயின் விருந்துடன் ஆரம்பிக்கிறது பிரான்சு நாட்டினரின் புத்தாண்டு கொண்டாட்டம். பான் கேக், வான்கோழிக்கறி போன்ற பாரம்பரிய உணவுகள் இந்த விருந்தில் பரிமாறப்படும். புத்தாண்டு விருந்தில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் அந்த ஆண்டு சிறப்பாக அமையும் என்று நம்புகிறார்கள். புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள்.

டென்மார்க்:

டென்மார்க்கில் பழைய தட்டுகளை வீசி எறிந்து, புத்தாண்டை வரவேற்கின்றனர். வீட்டு வாசலில் எவ்வளவு உடைந்த சமையலறைப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதோ, அந்த அளவுக்கு புதிய ஆண்டு சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

பிலிப்பைன்ஸ்:

புத்தாண்டு தினத்தை பிலிப்பைன்ஸ் மக்கள் ஆப்பிள், திராட்சை மற்றும் பிளம்ஸ் போன்ற 12 வட்டமான பழங்களைப் பரிமாறி கொண்டாடுகின்றனர். நாணயங்களைப் பிரதிபலிக்கும் அவற்றின் வடிவம் செழிப்பைக் குறிக்கும்.

மெக்சிகோ:

சோள மாவு, காய்கறி, சீஸ், இறைச்சி ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்ட 'தமால்' என்ற உணவை அனைவருக்கும் வழங்கி மெக்சிகோ மக்கள் புத்தாண்டை வரவேற்கிறார்கள்.

கிரேக்கம்:

வருடப் பிறப்பு அன்று வெங்காயத்தை வீட்டின் நுழைவுவாசலில் கட்டி விடுவது கிரேக்கர்களின் வழக்கம். புத்தாண்டு தினத்தன்று இதுபோல் கட்டுவதால் வளர்ச்சி, மகப்பேறு, அதிர்ஷ்டம் ஆகியவை கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.


Next Story