வெயில் காலத்தில் சர்க்கரை நோயாளிகள் இதையெல்லாம் செய்யாதீங்க..


வெயில் காலத்தில் சர்க்கரை நோயாளிகள் இதையெல்லாம் செய்யாதீங்க..
x
தினத்தந்தி 28 Sep 2024 5:51 AM GMT (Updated: 29 Sep 2024 6:53 AM GMT)

வெப்பமான சூழ்நிலையில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.இது வியர்வை மற்றும் இதயத்துடிப்பை அதிகப்படுத்தும்.

சென்னை,

இன்றைய அவசர காலகட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் நம் நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதற்கு நாம் உட்கொள்ளும் உணவு மிக முக்கிய காரணமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகள் வெயில் காலத்தில் எதையெல்லாம் பின்பற்ற வேண்டும் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

வெயில்காலத்தில் மற்றவர்களை விட சர்க்கரை நோயாளிகள் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வெயில்காலத்தில் சர்க்கரைநோயாளிகள் பின்பற்றவேண்டியவை:

1) கோடைகாலத்தில் மற்றவர்களை காட்டிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நீரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

2) நீர்சத்து மற்றும் நார்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். (எ.கா) வெள்ளரிக்காய், முள்ளங்கி, ஆரஞ்சு, ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிபழம், மாதுளம்.

3) வெயில் காலத்தில் இன்சுலின் உணர்திறன் குறைவதால் இது சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. அதனால் அடிக்கடி இரத்தசர்க்கரை அளவை பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்.

4) பொதுவாக வெயிலில் செல்வதை தவிர்ப்பது நல்லது. வெயிலில் கண்டிப்பாக செல்ல நேர்ந்தால் முகம் மற்றும் தோலில் சன்ஸ்கிரீன் தடவி கொண்டும், பருத்தி மற்றும் காற்றோட்டம் உள்ள ஆடைகள் அணிந்தும், குடை நிழலிலும் செல்வது நல்லது.

5) இன்சுலின் மற்றும் மருந்துகளின் செயல்திறனை வெப்பம் குறைக்கக்கூடியதால் வெப்பத்திலிருந்து இவற்றை விலக்கி, குளிர்ந்த அல்லது உலர்ந்த இடத்தில் அதனைவைக்கலாம்.

6) உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி விடியற்காலை நேரத்தில் அல்லது (இண்டோர்) வீட்டிற்கு உள்ளே செய்வது நல்லது. வெயில் நேரத்தில் நடைபயிற்சி செய்வது தோல் சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.

சர்க்கரை நோயாளிகள் வெயில் காலத்தில் பின்பற்ற கூடாதவை:

1) மது அருந்துதல் கூடாது. ஏனெனில் மதுவில் டையூரிடிக்பண்புகள் ( நீரைவெளியேற்றுவது) இருப்பதால் நீரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

2) எனர்ஜிபானங்கள், பழச்சாறுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

3) வெப்பமான சூழ்நிலையில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.இது வியர்வை மற்றும் இதயத்துடிப்பை அதிகப்படுத்தும்.

4) தலைவலி, மயக்கம், தசைபிடிப்பு, வாந்திபோன்ற அறிகுறிகளை உதாசீனப்படுத்த வேண்டாம். அவை (ஹீட்எக்ஸாஷன்) வெப்பசோர்வின் தொடக்கமாக இருக்கலாம்.

5) எந்த காரணம் கொண்டும் காலணிகள் இல்லாமல் வெளியே செல்லக்கூடாது. முடிந்தால் வீட்டுக்குள்ளேயும் காலணிகள் அணிவது நல்லது.

6) எண்ணெயில் பொரித்த மற்றும் காரமான உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.




Next Story