ராகுல் காந்தியின் பர்பானி வருகை 'நாடகம்' என பா.ஜனதா விமர்சனம்


ராகுல் காந்தியின் பர்பானி வருகை நாடகம் என பா.ஜனதா விமர்சனம்
x
தினத்தந்தி 23 Dec 2024 10:43 AM IST (Updated: 23 Dec 2024 10:52 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் சாசன மாதிரி சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த விஜய் வகோடேவின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் பர்பானியில் கடந்த 10-ந் தேதி அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டு இருந்த அரசியல் சாசன மாதிரி சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு பயங்கர வன்முறை ஏற்பட்டது. வன்முறையில் தொடர்புடையதாக சோம்நாத் சூரியவன்சி உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர். இதில், சோம்நாத் சூரியவன்சி நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்து உள்ளது. நீதிமன்ற காவலில் ஏற்பட்ட உயிரிழப்பு பர்பானியில் பதற்றத்தை அதிகரித்து உள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நீதிமன்ற காவலில் உயிரிழந்த சோம்நாத் சூரியவன்சியின் குடும்பத்தினரை இன்று (திங்கட்கிழமை) மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பர்பானியில் சந்தித்து பேசுகிறார். இதேபோல அரசியல் சாசன மாதிரி சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த விஜய் வகோடேவின் குடும்பத்தினரை சந்தித்தும் ராகுல் காந்தி பேச உள்ளார்.

இந்தநிலையில் ராகுல் காந்தியின் பர்பானி வருகை 'நாடகம்' என பா.ஜனதா கட்சி விமர்சித்து உள்ளது. இதுகுறித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், "இது போன்ற நாடகங்களுக்கு பதிலாக, ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் மூலம் சமூகத்தை எவ்வாறு பயன் அடைய வைக்கலாம் என்பதில் கவனம் செலுத்தலாம். பா.ஜனதா மாநிலத்தின் அனைத்து சமூகத்தினரையும் ஒற்றுமையாக வைப்பதில் உறுதியாக உள்ளது" என்றார்.


Next Story