ஆபாச வீடியோக்கள்.. டிஜிட்டல் கைது: பெண் டாக்டரிடம் ரூ.59 லட்சத்தை அபேஸ் செய்த ஹைடெக் கும்பல்


பெண் டாக்டரிடம் ரூ.59 லட்சத்தை அபேஸ் செய்த ஹைடெக் கும்பல்
x
தினத்தந்தி 25 July 2024 12:12 PM GMT (Updated: 25 July 2024 12:27 PM GMT)

பெண் டாக்டரிடம் 48 மணி நேரம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் விசாரணை நடத்திய மோசடி கும்பல், 59 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வைத்துள்ளனர்.

புதுடெல்லி:

இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதன்மூலம் நடைபெறும் மோசடிகள் மற்றும் பணம் பறிப்பு சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அவ்வகையில், நொய்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை 'டிஜிட்டல் கைது' என்று ஏமாற்றி, அவரிடம் இருந்து 59 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் ஹைடெக் மோசடி கும்பல் அபகரித்துள்ளது.

டெல்லி அருகே உள்ள நெய்டா 77-வது செக்டாரைச் சேர்ந்த டாக்டர் பூஜா கோயலுக்கு கடந்த 13-ம்தேதி செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்னை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என்று அறிமுகம் செய்துள்ளார். "டாக்டர் பூஜா கோயல், உங்கள் செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளன. இதற்காக உங்களிடம் விசாரணை நடத்துகிறோம்" என்று கூறி உள்ளார்.

அப்படி எதுவும் இல்லை என்று டாக்டர் மறுக்க, அவரை சமாதானம் செய்த அந்த நபர், இது விசாரணைதான் வீடியோ காலில் இணையுங்கள் என்று கூறி உள்ளார். அவர் வீடியோ காலில் இணைந்ததும், 'உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம், டிஜிட்டல் கைது நடவடிக்கை எடுத்துள்ளோம், வீட்டை விட்டு வெளியேறக்கூடாது' என்று கூறி மிரட்டி உள்ளார்.

பயந்துபோன டாக்டர் பூஜா கோயல், அந்த நபர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். இவ்வாறு 48 மணி நேரம் அவரிடம் மிரட்டி விசாரணை நடத்திய அந்த நபர், ஒரு வங்கி கணக்கை அனுப்பி அதில் 59 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அனுப்பும்படி கூறி உள்ளார். அதன்படி பணம் அனுப்பி உள்ளார். பின்னர் அந்த நபர் விசாரணை முடிந்ததாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து டாக்டர் பூஜா கோயல் விசாரித்து பார்த்தபோது, ஆன்லைன் மோசடி நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் இதுபற்றி 22-ம் தேதி நொய்டா 36-வது செக்டாரில் உள்ள காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர். அவர்களின் வங்கி கணக்கை வைத்து அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் பிரிவு உதவி கமிஷனர் விவேக் ரஞ்சன் ராய் தெரிவித்தார்.

மக்களை பயமுறுத்தி மோசடி செய்வதற்காக மோசடி கும்பலின் 'டிஜிட்டல் கைது' என்ற தந்திரம் வேகமாக வளர்ந்து வருகிறது. மோசடி செய்பவர்கள் வெளியில் எங்கும் செல்ல மாட்டார்கள். ஒரு வீட்டிற்குள் இருந்துகொண்டே காரியத்தை முடிக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு அலுவலகம் போன்ற தோற்றத்துடன் கூடிய அறையில் இருந்தபடி வீடியோ காலில் பேசி, தங்களை சட்ட அமலாக்க அதிகாரிகளாக காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் உண்மையான அதிகாரிகள் என்று நம்பவைக்க போலி அடையாள அட்டைகளை அனுப்புகிறார்கள். இவர்களின் வலையில் விழும் நபர்கள், பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பணத்தை அனுப்பி ஏமாந்துவிடுகிறார்கள்.

டாக்டர் பூஜா கோயல் போன்று, இதற்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவர், 83 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார்.

இதுபோன்ற மோசடி கும்பலிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி நொய்டா காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. சமீப காலமாக கிட்டத்தட்ட 10 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரியாத நபர்களிடம் இருந்தோ அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்களோ தொடர்பு கொண்டால் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்களை அதிகாரிகளாக காட்டிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினாலோ, அல்லது தனிப்பட்ட அல்லது நிதி தொடர்பான தகவலைக் கேட்டாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க வேண்டும் என நொய்டா காவல்துறை கூறி உள்ளது.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi


Next Story