3-ம் உலக போர்... தேதியை அறிவித்த பிரபல ஜோதிடர்


3-ம் உலக போர்... தேதியை அறிவித்த பிரபல ஜோதிடர்
x
தினத்தந்தி 4 Aug 2024 11:31 AM GMT (Updated: 4 Aug 2024 12:15 PM GMT)

இஸ்ரேல் மீது போரை தொடுக்க ஈரான் தலைவர் காமினி உத்தரவிட்ட சில தினங்களில், 3-ம் உலக போர் பற்றிய பிரபல ஜோதிடரின் அறிவிப்பு பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படுபவர் குஷால் குமார். இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படுபவர். இதற்கு முன் ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரை கணித்தவர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்தவர்.

இந்த போர்களால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, உணவு தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டன. கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டு வந்த சூழலில், இந்த போர்கள் ஆப்பிரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டன.

இந்த நிலையில், 3-ம் உலக போர் தொடக்கம் பற்றிய தேதியை குஷால் அறிவித்து உள்ளார். அவருடைய கணிப்பின்படி, இந்த போர் இன்று அல்லது நாளை தொடங்கும். ஆகஸ்டு 4 அல்லது ஆகஸ்டு 5 ஆகிய இரு தேதிகளில் போர் தொடங்கும் என அவர் கூறினார். அவருடைய கணிப்பின்படி, அந்த நாள் இன்று தொடங்குகிறது.

ஆனால், அது மெய்யாவதற்கான சாத்தியங்கள் பின்னரே தெரிய வரும். இதற்கு முன்பும் அவர் பல முறை 3-ம் உலக போர் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளார். இதன்படி, நடப்பு ஆண்டின் ஜூன் 18-ந்தேதி போர் தொடங்கும் என கூறினார். ஆனால், அன்று எதுவும் நடக்கவில்லை. இதன்பின், புதிய தேதியை அறிவித்த அவர், ஜூலை 26 அல்லது ஜூலை 28 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு தேதியில் 3-ம் உலக போர் தொடங்கும் என கணிப்பு வெளியிட்டார். ஆனால், அதுவும் தவறாகி போனது.

அரியானாவின் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த வேத ஜோதிடரான குஷாலின் கட்டுரைகள் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் நகரங்களில் வெளியாகும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

அவர் பொருளாதாரம், வானிலை, வர்த்தகம், மோதல்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் ஆகியவை பற்றி கணிப்பதில் திறன் பெற்றவராக இருந்து வருகிறார். ஒருவருடைய பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை வைத்து, அவருடைய தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கான விசயங்களை கணித்து கூறியும் வருகிறார்.

உலகத்தில் உள்ள பல்வேறு மதங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆன்மீக விசயங்கள் பற்றியும், இந்தியாவின் முனிவர்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்து எழுதி வருகிறார். ஆழ்ந்த மற்றும் மதிப்புமிக்க தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நடந்து வரும் சூழலில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையேயும் போருக்கான சாத்தியங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இஸ்ரேல் மீது போரை தொடுக்க ஈரான் தலைவர் அலி காமினி உத்தரவிட்டு சில தினங்கள் ஆன நிலையில், பிரபல ஜோதிடரின் 3-ம் உலக போர் பற்றிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story