ஆரோவில் பகுதியை சுற்றிப்பார்த்த ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகள்


ஆரோவில் பகுதியை சுற்றிப்பார்த்த ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகள்
x

ஜி20 மாநாட்டுக்கு வந்திருந்த பன்னாட்டு பிரதிநிதிகள் ஆரோவில் பகுதியை இன்று சுற்றிப் பார்த்தனர். அங்குள்ள மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும் செய்தனர்.

புதுச்சேரி

ஜி20 மாநாட்டுக்கு வந்திருந்த பன்னாட்டு பிரதிநிதிகள் ஆரோவில் பகுதியை இன்று சுற்றிப் பார்த்தனர். அங்குள்ள மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும் செய்தனர்.

ஜி20 மாநாடு

புதுவையில் ஜி20 மாநாடு நேற்று முதலியார்பேட்டை மரப்பாலம் பகுதியில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நடந்தது. இந்த மாநாட்டில் 10 நாடுகளை சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மாலையில் அவர்களுக்கு சின்னவீராம்பட்டினத்தில் உள்ள ரேடிசன் ஓட்டலில் கலை நிகழ்ச்சிகளுடன் விருந்து அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

ஆரோவில் சுற்றுப்பயணம்

2-வது நாளான இன்று காலை மாநாட்டு பிரதிநிதிகள் ஜி20 மாநாட்டின் இந்தியாவுக்கான தலைவர் அசுதோஷ் ஷர்மா தலைமையில் 45 பேர் புதுச்சேரியை அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில்லுக்கு சொகுசு பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் புதுச்சேரி கலெக்டர் வல்லவனும் சென்றார். அங்கு அவர்களை ஆரோவில் செயலாளர் ஜெயந்தி ரவி வரவேற்றார்.

இதன்பின் பார்வையாளர் மையத்துக்கு வந்த மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஆரோவில் தொடங்கப்பட்ட வரலாறு குறித்த குறும்படம் காண்பிக்கப்பட்டது.

மாத்ரி மந்திரில் தியானம்

அதன்பின் அவர்கள் அங்குள்ள மாத்ரி மந்திருக்கு சென்றனர். அதன் அழகை கண்டு வியந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சுற்றிப்பார்த்தனர். பின்னர் அதனுள் சென்று சிறிது நேரம் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் பாரத் நிவாஸ் சென்று அங்குள்ள நிலத்தடிநீர் குறித்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

தொடர்ந்து அவர்களுக்கு ஆரோவில்லில் மதிய உணவு வழங்கப்பட்டது. அதன்பின் மாநாட்டு பிரதிநிதிகள் புதுச்சேரி திரும்பினார்கள். சிலர் அந்த வழியாகவே தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர்.

பன்னாட்டு பிரதிநிதிகள் ஆரோவில்லை பார்வையிட வந்ததையொட்டி அங்கு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆரோவில் பகுதியில் குடியிருப்பவர்கள் தவிர மற்றவர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆரோவில் செல்லும் சாலையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.


Next Story