புதிய தேசிய கல்வி கொள்கைதான் நாட்டின் எதிர்காலம்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


புதிய தேசிய கல்வி கொள்கைதான் நாட்டின் எதிர்காலம்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x
தினத்தந்தி 27 May 2024 8:11 AM GMT (Updated: 27 May 2024 8:47 AM GMT)

புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம் எனவும், தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளதாகவும் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 2 நாள்கள் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

"2021-ம் ஆண்டு நான் கவர்னராக பொறுப்பேற்ற போது, தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்சனைகள் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே இந்த மாநாடு 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். இளைஞர்களை கல்வி திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை நாம் தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடும்.

இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். கற்பித்தல் குறித்து திருவள்ளுவரின் 'கற்க கசடற' என்ற கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையில் பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. புதிய கல்விக் கொள்கைதான் நாட்டின் எதிர்காலம். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்"இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.


Next Story