சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியது அரசின் கடமை - ஓ.பன்னீர்செல்வம்
சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியது அரசின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சட்டத்தை மதிப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும்; சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக்கூடிய எதிரியாகவும் காவல் துறை விளங்க வேண்டும். அதாவது, காவலர் என்பவர் நாணயத்தின் இரு பக்கம் போன்றவர். சட்டப்படி நடப்பவருக்கு நண்பர் எனும் பக்கம் தெரிய வேண்டும். சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிரி என்ற பக்கம்தான் தெரிய வேண்டும். இந்த நிலை ஒரு நாட்டில் இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, அமைதியான சூழ்நிலை உருவாகும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலைதான் தமிழ்நாட்டில் நிலவிக் கொண்டிருக்கிறது.
குற்றம் புரிந்தவர்களை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, தக்கத் தண்டனை பெற்றுத் தருவது மாநில அரசின் கடமையாகும். அந்தக் கடமையை செய்யத் தவறியதன் காரணமாக பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தங்களுடைய உடமைகளை யாராவது பறித்துக் கொள்வார்களோ, தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்ச உணர்விலேயே பொதுமக்கள் வாழக்கூடிய அவவ நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.
அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகளால் தாக்கப்படுகிறார்கள் அல்லது மிரட்டப்படுகிறார்கள்; ரெயிலில் பயணிகள் தாக்கப்படுகிறார்கள்; பேருந்துகளில் பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் தாக்கப்படுகிறார்கள்; சாலைகளில் அப்பாவி மக்கள் தாக்கப்படுகிறார்கள்; அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்படுகிறார், என்ற வரிசையில் தற்போது பள்ளிக்குள் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியை தாக்கப்பட்டு இருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியை, வகுப்பறையில் மாணவ, மாணவியர் முன்பே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படுகொலையின் மூலம், பள்ளி ஆசிரியர்களுக்கும், அங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுபோன்ற வெறிச் செயல்கள் அன்றாடம் நடப்பதற்குக் காரணம், தி.மு.க. அரசு குற்றம் புரிபவர்கள்மீது மென்மையானப் போக்கை கடைபிடிப்பதுதான். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, திருநெல்வேலியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை வழக்கு, என பல்வேறு வழக்குகள் மந்த கதியில் சென்று கொண்டிருப்பது தி.மு.க அரசின் மென்மையானப் போக்கிற்கு எடுத்துக்காட்டுகள்.
சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியது மாநில அரசின் கடமை. இந்தக் கடமையிலிருந்து தி.மு.க. அரசு விலகி இருப்பதன் காரணமாக, பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்றதொரு நடவடிக்கை தமிழ்நாட்டை அழிவுப் பாதையில்தான் அழைத்துச் செல்லும்.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, மேற்படி கொலை வெறித் தாக்குதலுக்கு காரணமானவரை சட்டத்தின்முன் நிறுத்தி, விரைந்து தண்டனைப் பெற்றுத் தரவும், உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும், அனைத்து கொலை கொள்ளை வழக்குகளையும் விரைந்து முடிக்கவும், இனிமேல் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.