சுடுகஞ்சி மேலே கொட்டியதில் காயமடைந்த சிறுமி உயிரிழப்பு


சுடுகஞ்சி மேலே கொட்டியதில் காயமடைந்த சிறுமி உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Nov 2024 9:45 AM IST (Updated: 21 Nov 2024 11:53 AM IST)
t-max-icont-min-icon

சுடுகஞ்சி மேலே கொட்டியதில் காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை அருகே புதுப்பேட்டை என்ற பகுதி உள்ளது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இங்கு வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 14-ந் தேதி வீட்டில் சமையல் வேலைகளை பிகாஷ் ரவிதாசின் மகளான சிறுமி நந்தினி செய்து கொண்டிருந்தார். அப்போது, சமையல் அறையில் உள்ள கியாஸ் அடுப்பில் பெரிய அலுமினிய பாத்திரம் ஒன்றில் சாதத்திற்கான உலை கொதித்து கொண்டிருந்தது. சாதம் வெந்த நிலையில், அந்த அலுமினிய பாத்திரத்தில் இருந்த சாதத்தை சிறுமி நந்தினி வடிக்க முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக கொதிக்கும் உலையுடன் கூடிய சாதம், அப்படியே அவரது வயிற்று பகுதியில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி நந்தினி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.


Next Story