மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்த நிலையில், மீண்டும் தமிழகம் நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது. இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (24-ம் தேதி) தமிழக வட மாவட்டங்களின் கடலோர பகுதி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யலாம் என்றும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வு பகுதி, மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன்படி வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நாளை ஆந்திர - வடதமிழகம் கடற்கரையை நோக்கி நகரும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை நோக்கி நகரும்போது நாளை (டிச., 24-ம் தேதி) நாளை மறுநாள் (25-ம் தேதி) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.