பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி


பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி
x

image courtesy: AFP

மொராக்கோ அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வியடைந்தது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது.

ஒலிம்பிக் திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் ஆரம்பித்து நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் 'பி' பிரிவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி, மொராக்கோவை சந்தித்தது. இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அர்ஜென்டினா அணி வீரர்கள் கோல் அடிப்பதில் தீவிரமாக இருந்தனர். ஆனால் முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணியின் ரஹிமி முதல் கோலை அடிக்க, அடுத்த சில நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ரஹிமி, மொராக்கோ அணிக்காக 2வது கோலை அடித்தார். இதன் மூலமாக மொராக்கோ 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் 68வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் சிமோன் அந்த அணிக்காக முதல் கோலை அடிக்க, இதனால் ஆட்டம் 2-1 என்ற பரபரப்பான கட்டத்திற்கு சென்றது. இந்த நிலையில் ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மெதினா ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற நிலைக்கு வந்தது.

ஆனால் விஏஆர் தொழிற்நுட்பம் மூலம் அர்ஜென்டினா அணி அடித்த கோல் ரிவ்யூ செய்யப்பட்டது. அதில் அர்ஜென்டினா அடித்த கோல் ஆப் சைட் என்று அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 1-2 என்ற கோல் கணக்கில் மொராக்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இதனிடையே மைதானத்திற்குள் ரசிகர்கள் அத்துமீறி நுழைந்ததால் ஆட்டம் வெகு நேரம் பாதிக்கப்பட்டது.


Next Story