வார ராசிபலன் 09.06.2024 முதல் 15.06.2024 வரை


Weekly RasiPalan
x

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்:

மேஷம்

தகவல் தொடர்புகளாலும், பயணங்களாலும் ஆதாயம் கிடைக்கும் வாரம். மனதில் தெய்வ நம்பிக்கை அதிகமாகும். வார தொடக்கத்தில் வயிற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் சரியாகும். தொழில், உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். பழைய கடன்கள் தீர்க்கப்பட்டு புதிய கடன்கள் ஏற்படும். இந்த வாரம் இரும்பு சம்பந்தமான தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் ஏற்பட்டு லாபம் கிடைக்கும். பலருக்கும் வரவை விட செலவினங்கள் அதிகமாக இருக்கும். ஆதாயம் பெற ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்பதை விட நேரில் சென்றால்தான் காரியம் வெற்றி கிடைக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் லாபம் கிடைக்கும். வார இறுதியில் மனதில் உற்சாகம் ஏற்படும்.

ரிஷபம்

பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும் வாரம் இது. தொழில்துறையினர் புதிய மாற்றங்களை செய்து முன்னேற்றம் பெறும் காலகட்டம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் நிர்வாக மாற்றங்களால் மகிழ்ச்சி அடைவார்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. எதிராளிகள், தொழில் கூட்டாளிகள், சக அலுவலக நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், பலர் ஒன்றுகூடி உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். பல சுபகாரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்

திட்டமிட்டு காரிய வெற்றியை அடையும் கால கட்டம் இது. தொழில், உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் ஆதாயம் அடைவார்கள். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வார இறுதியில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமாகும். கலைத்துறையினர் புதிய சிந்தனைகளால் புகழ் பெறும் வாரம். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியான அங்கீகாரம் அளிக்கப்படும். கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும். நண்பர்களை தேடிச்சென்று உதவி செய்வீர்கள். பலர் பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்குவார்கள். ரியல் எஸ்டேட் துறையினருக்கு லாபகரமான காலம் இது.

கடகம்

நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு துணிச்சலாக தீர்வு காணும் வாரம் இது. அரசு பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். கூடுதல் உற்பத்தியால் தொழில் துறையினர் ஆதாயம் அடைவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாற்றம் உண்டு. தொழிலதிபர்கள் பணியாளர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய சூழல் உருவாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் மனதில் உற்சாகம் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகளை கட்டாயம் அனுசரித்து செல்ல வேண்டும். பல்வேறு செலவுகளால் கையில் உள்ள பணம் கரையும். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் எச்சரிக்கை தேவை.

சிம்மம்

மனதில் உற்சாகம் பொங்கும் வாரம் இது. தொழில் துறையினருக்கு லாபகரமான காலகட்டம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிர்வாகம் அறிவித்த ஊதிய உயர்வை பெறுவார்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் விரிவாக்கம் செய்யும் சூழல் உருவாகும். கேட்ட இடத்திலிருந்து பொருளாதார உதவி கிடைக்கும். நீங்களும் மற்றவர்களுக்கு பண உதவிகளை செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் பேச்சு மதிக்கப்படும் காலகட்டம் இது. சந்தோஷமான சூழலில் சிலர் பேசும் பேச்சுகளால் கோபம் கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகும். வாழ்க்கை துணையிடம் எவ்விதமான வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அமைதி காப்பதே நல்லது. வண்டி வாகனம், வீடு மனை யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும்.

கன்னி

பெரியோர்களது ஆலோசனைப்படி வாழ்க்கை பாதையில் நடந்து செல்லும் வழிமுறைகளை அறிந்து கொள்ளும் வாரம் இது. ஆண்களுக்கு பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டவர்கள் அதை செய்து முடிக்கும் காலகட்டம். தொழில் கூட்டாளிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நண்பர்கள்போல பழகும் எதிராளிகளை அறிந்து கொள்ளும் சூழல் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் வேண்டும். முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக அசையா சொத்துகள் விற்பதில் இருந்த தடங்கல்கள் அகலும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். சுற்றம் சூழ உறவினர் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். கால்நடை, கோழிப்பண்ணை நடத்துபவர்களுக்கு இவ்வாரம் ஆதாயம் அதிகரிக்கும்.

துலாம்

முயற்சிகளில் வெற்றி கிட்டும் காலகட்டம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் துறையினருக்கு லாபகரமான வாரம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மன அழுத்தம் அகலும். ஒரு சிலருக்கு புதிய எதிராளிகளால் பிரச்சினை ஏற்படும். உற்சாகமான சூழ்நிலையில் உறவுகளோடு மகிழ்ச்சியாக இருந்தாலும் மனம் அதில் முழுமையாக ஈடுபடாது. அரசு காரியங்களில் எதிர்பார்த்திருந்த அனுகூலம் கிடைக்கும். விவசாயம், கால்நடை, ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் கிடைத்து தொழில் விரிவாக்கம் செய்வார்கள். வாழ்க்கை துணையாலும், அவரது உறவினர்களாலும் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்

வாரத்தின் பிற்பகுதியில் பல இடங்களுக்கு சென்று பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களது மதிப்பு எவ்வளவு என்பதை அறியும் சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேறு பணியிலோ அல்லது பதவி உயர்வு பெற்று வேறு பிரிவிலோ அமர்வார்கள். தொழில் துறையினர் பணியாளர்களை அனுசரித்து செயல்பட்டால், திட்டமிட்ட லாபங்களை பெறுவார்கள். தகவல் தொழில்நுட்பம், கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபகரமான வாரம் இது. குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும். வயதானவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்து கொள்ள வேண்டும்.

தனுசு

செய்தொழில், உத்தியோகம் இரு தரப்பினருக்கும் ஆதாயம் அளிக்கும் காலகட்டம் இது. விவசாயிகள் குறைவான லாபத்தையே அடைவார்கள். எந்த ஒரு பிரயாணமாக இருந்தாலும் அதன் அவசியத்தை அனுசரித்தே பயணிக்க வேண்டும். இயன்ற வரை பயணங்களை வார இறுதிக்கு தள்ளி வைப்பதே நல்லது. ஒரு சிலருக்கு தந்தை வழி சொந்தங்களால் நன்மைகள் ஏற்படும். பல விஷயங்களில் இருந்த காரியத்தடைகள் இந்த வாரம் அகலும். ஒரு சிலர் திருமண சுப காரிய பேச்சுகளை முன்னின்று நடத்துவார்கள். கடன் வாங்கி சுபச்செலவுகளை செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள், நண்பர்கள் விஷயத்தில் ஏமாற்றங்களை சந்திக்கும் வாரம் இது.

மகரம்

மன உற்சாகத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம் இது. இரவு பயணங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவசியத்துக்கு ஏற்ப பகல் நேரத்தில் மட்டும் பயணிக்கலாம். தொழில் துறையினர், உத்தியோகஸ்தர்கள் பல வகைகளில் ஆதாயம் அடைவார்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சுப காரியங்கள் நடந்தேறும். சமூகத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் உள்ளவர்களுக்கு லாபகரமான வாரம் இது. ரியல் எஸ்டேட் துறையினர் தொழில் விரிவாக்க திட்டத்தை மேற்கொள்ள சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில மகர ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்கும். கலைத்துறையினர் சாதனை புரியும் காலகட்டம் இது.

கும்பம்

மனதில் புதிய நம்பிக்கை உருவாகும் காலகட்டம் இது. தொடர்ந்து சோதனைகளை சந்தித்ததால் மனதில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக இந்த வாரம் இருக்கும். குடும்பஸ்தர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சற்றே குறையும். செலவுகள் கட்டுக்குள் உள்ள காலகட்டம். தொழில் துறையினர் இரவு பகலாக உழைப்பை அளிக்க வேண்டிய சூழல். உழைப்புக்கேற்ற பலன்களை பெறுவதில் எவ்வித தடையும் இல்லை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் அதிகப்படியான அதிகாரத்தை சகித்துக்கொள்ள வேண்டிய காலகட்டம். தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அனைத்து தரப்பினரும் அளிக்கும் துன்பங்களை மவுனமாக சகித்துக்கொண்டுள்ள பெண்மணிகளுக்கு இது ஆறுதலான வாரமாக இருக்கும்.

மீனம்

உற்சாகமான வாரம் இது. தொழில் துறையினருக்கு முன்னேற்றமான வாரம். உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தைவிட கூடுதல் கவனத்துடன் பணி புரிவது அவசியம். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும். கையில் உள்ள சேமிப்புகள் கரைந்தாலும் மனதில் உள்ள நம்பிக்கை திடமாக இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் இந்த வாரம் உதவிகரமாக இருப்பார்கள். திருமண பேச்சுகள் நல்லவிதமாக முடியும். உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து வருமானம் உயரும். தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். வார இறுதியில் இரவு நேர பிரயாணங்களை தவிர்க்கவும்.

Next Story