பெருமாளின் பரிபூரண அருளை வாரி வழங்கும் புரட்டாசி மாதம்


பெருமாளின் பரிபூரண அருளை வாரி வழங்கும் புரட்டாசி மாதம்
x

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்குரிய பூஜைகளை செய்து வழிபடுவதால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதம் புரட்டாசி. நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய மாதமாக இருப்பது, புரட்டாசி. புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர், மகாவிஷ்ணு. எனவேதான் புதன் கிரகத்தின் அருளைப் பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக இருக்கிறது.

பெருமாளின் அம்சமாகவே கருதப்படும் புதனுக்குரிய வீடு, கன்னி ராசி. இந்த ராசியில் சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்தில்தான். எனவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது போன்றவை செய்யப்படுகின்றன.

புதன் கிரகத்திற்கு நட்பானவர், சனி பகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள், பெருமாள் வழிபாட்டிற்கு கூடுதல் சிறப்புக்குரியதாக இருக்கிறது.

புரட்டாசி மாதத்தை, எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அவ்வாறு வழிபட முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலாவது, பெருமாளுக்குரிய பூஜைகளை செய்து வழிபடுவதோடு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென மேலும் ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதம் நாளை (17.9.2024) பிறக்கிறது. அதுவும் பவுர்ணமியன்று மாதப்பிறப்பு வருவது கூடுதல் சிறப்பு. புரட்டாசி மாதம் முழுவதும், பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story