ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் இத்தனை பலன்களா..?


பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்த காரியம் நிறைவேறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். இதில் தஷ்ணாயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்பு உடையவையாக கருதப்படுகின்றன.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் இருக்கலாம். அன்று சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும், மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நிறைவேறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆடி மாத வளர்பிறை வெள்ளியில் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து 10 வயதிற்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், கொடுத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபட வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

அம்மனை வழிபடும்போது 'லலிதாசகஸ்ர நாமம்' பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்க செய்ய வேண்டும். ஆடி மாதம் அம்மனுக்கு வளையல்சாற்றி அந்த வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, அருகம்புல்லால் பூஜிக்க வேண்டும். கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும். காரியத் தடை விலகும்.

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை முறையாக செய்தால் நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல இன்னல்கள் தீரும். வெளியில் சொல்ல முடியாத அவமானங்கள் கஷ்டங்கள் கூட, காணாமல் போய்விடும் என்பது ஐதீகம்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story