திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம்


புஷ்ப யாகத்துக்காக ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் 3 டன் மலர்களை காணிக்கையாக வழங்கியிருந்தனர்.

திருப்பதி:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உள்பட்ட திருப்பதி கோதண்டராம சுவாமி கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. யாகத்தை முன்னிட்டு, நேற்று காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, விஷ்ணு காயத்ரி மந்திரத்தை அர்ச்சகர்கள் 108 முறை ஓத புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, தாமரை, அல்லி, மொகலி ரெகுலு என 11 வகையான மலர்கள், 6 வகையான இலைகள் என மொத்தம் 3 டன் மலர்களால் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.

இந்த புஷ்ப யாகத்துக்காக ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் 3 டன் மலர்களை காணிக்கையாக வழங்கியிருந்தனர்.

புஷ்ப யாகம் முடிந்ததும் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Next Story