தண்ணீர் பயன்பாட்டில் சாதித்த விவசாயி


தண்ணீர் பயன்பாட்டில் சாதித்த விவசாயி
x
தினத்தந்தி 27 Nov 2022 1:30 AM GMT (Updated: 27 Nov 2022 1:30 AM GMT)

வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உறவினர் ஒருவருடன் கலந்தாலோசித்து சொட்டு நீர் பாசன முறைக்கு மாறினோம். 30 ஆண்டுகளுக்கு முன்பே தொண்டாமுத்தூரில் முதன் முறையாக சொட்டு நீர் பாசனத்திற்கு மாறியது நாங்கள் மட்டுமே. அதன் பின்னர் நிறைய பேர் சொட்டு நீர் பாசனத்திற்கு மாற ஆரம்பித்தனர்.

"வரும் தலைமுறைக்கு வற்றாத நீர் வளத்தை விட்டுச் செல்வதே மிகப்பெரிய சொத்து" என்கிறார் இயற்கை விவசாயி நாகரத்தினம். பி.எஸ்சி. ஹோம் சயின்ஸ் பட்டதாரியான இவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் மாணிக்கராஜ் மருத்துவர்.

சொட்டு நீர் பாசனம் மூலமாக விவசாயம் செய்து, தொண்டாமுத்தூர் பகுதிக்கே முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் நாகரத்தினம். அவருடன் ஒரு சந்திப்பு.

சொட்டு நீர் பாசனத்திற்கு மாறியது எப்படி?

திருமணத்திற்கு முன்பு வரை நான் விவசாயத்தில் ஈடுபட்டது கிடையாது. கணவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் விவசாயத்தில் ஈடுபட்டேன். கணவர் மருத்துவராக இருந்தாலும், விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். அவர்தான் 'சொட்டு நீர் பாசன முறை'யைப் பற்றி தெரிவித்தார்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உறவினர் ஒருவருடன் கலந்தாலோசித்து சொட்டு நீர் பாசன முறைக்கு மாறினோம். 30 ஆண்டுகளுக்கு முன்பே தொண்டாமுத்தூரில் முதன் முறையாக சொட்டு நீர் பாசனத்திற்கு மாறியது நாங்கள் மட்டுமே. அதன் பின்னர் நிறைய பேர் சொட்டு நீர் பாசனத்திற்கு மாற ஆரம்பித்தனர்.

என்னென்ன பயிர்களை சாகுபடி செய்கிறீர்கள்?

பாக்கு, தென்னை, தேக்கு, வாழை, மஞ்சள், மிளகு, காய்கறிகள் என 5 அடுக்கு சாகுபடி செய்து வருகிறேன். பத்து ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்களுக்கும், இரண்டரை ஏக்கரில் பாக்கு மரங்களுக்கும் சொட்டு நீர் பாசன வசதி செய்துள்ளோம். வறண்டு கிடந்த 12.5 ஏக்கர் நிலத்தில் மண் பரிசோதனை செய்து கொய்யா, சப்போட்டா, மாம்பழம் போன்ற பழ மரங்களை வளர்த்து வருகிறோம்.

இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றி சொல்லுங்கள்?

2005-ம் ஆண்டு முதல் இயற்கையான முறையில் பஞ்ச கவ்யம், மண்புழு உரம், மீன் அமிலம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தயாரித்து ரசாயனம் இல்லாத விவசாயத்தை முன்னெடுத்து வருகிறேன். இந்த முறையில் தென்னை, பாக்கு, தேக்கு, சந்தனம், மகாகனி, மலைவேம்பு போன்ற பல வகையான மரங்களை வளர்க்கிறோம். 800-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்களில் மிளகுக் கொடிகளை படர விட்டு வளர்க்கிறோம்.

நீர்வளத்தை மேம்படுத்த நீங்கள் எடுத்த முயற்சி என்ன?

நிலத்தில் விழும் ஒரு துளி மழை நீர் கூட வீணாகக்கூடாது என்ற எண்ணம் கொண்டவள் நான். மழை நீரைச் சேகரிப்பதற்காக எங்கள் நிலத்தில் இரண்டு குட்டைகளையும், தென்னை மரங்களுக்கு இடை இடையே குழியையும் வெட்டி வைத்துள்ளோம். எங்கள் பகுதியில் 1000 அடிக்கு மேல் கிணறு தோண்டினால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். ஆனால், எங்கள் நிலத்தில் அன்று முதல் இன்று வரை 350 அடியிலேயே தண்ணீர் கிடைத்து வருகிறது.

விவசாயிகள் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, சொட்டு நீர் பாசன முறைக்கு மாறினாலே நிலத்தடி நீர்மட்டத்தைக் காக்க முடியும். பெண் விவசாயிகளுக்குச் சொட்டு நீர் பாசனம் செய்ய அரசு 75 சதவீத மானியம் வழங்குகிறது. இதனை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார் நாகரத்தினம்.


Next Story