சுற்றுச்சூழலைக் காக்கும் விஞ்ஞானி


சுற்றுச்சூழலைக் காக்கும் விஞ்ஞானி
x
தினத்தந்தி 20 Nov 2022 1:30 AM GMT (Updated: 20 Nov 2022 1:30 AM GMT)

உணவு, உடை, உறைவிடத்துக்கு அடுத்தபடியாக எரிசக்தி மூலம் கிடைக்கும் ஆற்றல் என்பதும் அடிப்படைத் தேவையாக விரைவில் மாறிவிடும். சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தாத ஒரு நல்ல ஆற்றலை உலகத்துக்கு வழங்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

"சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வளரும் தலைமுறையின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது. இது மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆபத்தானது" என்கிறார் சுபத்திரா.

மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, அறிவியல் மீது கொண்ட ஆர்வத்தால் விஞ்ஞானியாக உருவாகி இஸ்ரோவில் பணியாற்றினார். தற்போது தனது சொந்த நிறுவனத்தின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத புதுப்பிக்கத்தக்க வாகனங்களை இயக்கும் புதிய உத்தியைக் கையாண்டு, அதை வெற்றிகரமாகச் செய்து வருகிறார்.

வீடுகளில் காற்றாலை அமைத்து மின்னாற்றலைப் பெறும் ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வருகிறார். சிறந்த பெண் பொறியாளர், உலகப் பெண் சாதனையாளர், சிறந்த இண்டஸ்ட்ரி புரொபஷன் ஐகான் போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு…

"பள்ளிப் படிப்பை முடித்ததும் ரப்பர் டெக்னாலஜியில் பட்டயப் படிப்பை முடித்தேன். அதில் பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கம் வாங்கினேன். அதன்பிறகு ரசாயனப் பொறியியல் படிப்பில் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடம் பெற்றேன். எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் பெண் பொறியாளர். தற்போது கணவர், குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு எனது சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.

படிப்பை முடித்ததும் முதலில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். அதன்பிறகு இஸ்ரோவில் விஞ்ஞானியாக சில ஆண்டுகள் வேலை செய்தேன். பின்னர் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து இந்தியா மட்டுமில்லாமல், துபாய், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் வேலை செய்தேன்.

வேலையில் சாதிப்பதற்காகக் குடும்பத்தை இழக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். கணவர் மற்றும் குழந்தைகளுடன் எனது பெற்றோரையும் அழைத்துக்கொண்டுதான் வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக குடிபெயர்ந்து சென்றேன்.

ஒவ்வொரு நாட்டிலும் எனக்கு ஒவ்வொரு விதமான அனுபவங்கள் கிடைத்தன. நான் படித்த எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையிலும், ராக்கெட் சயின்ஸ் துறையிலும் ஆண்கள் மட்டுமே அதிகம் இருந்தனர். அதனால் பெண்கள் தங்களுக்கான இடத்தை பெறுவதற்கு அதிகமாக உழைக்க வேண்டிய சூழல் இருந்தது. பல நேரங்களில் 'உன்னால் முடியாது' என்று நான் கேட்ட வார்த்தைகளே, அதைச் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குத் தந்தது.

ஒரு பெண் படித்தால் அவளது குடும்பம் முழுவதுமே உயரும் என்பதற்கு நானே உதாரணம். அதனால் தான் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சில பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறேன். அவர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகளையும் அளிக்கிறேன்.

உணவு, உடை, உறைவிடத்துக்கு அடுத்தபடியாக எரிசக்தி மூலம் கிடைக்கும் ஆற்றல் என்பதும் அடிப்படைத் தேவையாக விரைவில் மாறிவிடும். அது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இருப்பது முக்கியம். சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தாத ஒரு நல்ல ஆற்றலை உலகத்துக்கு வழங்க வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்று புன்னகையுடன் விடை பெற்றார்.


Next Story