அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள்


அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள்
x
தினத்தந்தி 20 Nov 2022 1:30 AM GMT (Updated: 20 Nov 2022 1:30 AM GMT)

வயிறு நிறைந்துவிட்டதாக மூளைக்கு சமிக்ைஞகள் செல்வதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும். எனவே அவசர அவசரமாக கிடைப்பதை விழுங்காமல், மெதுவாக உணவை ருசித்து சாப்பிடுங்கள். இதனால் வயிறு நிறைந்த உணர்வு உண்டாகி அளவுக்கு மீறி சாப்பிடும் பழக்கம் மாறும்.

ரோக்கியமாக வாழ்வதற்கு உணவு தேவை. ஆனால், அதை அளவாகச் சாப்பிடுவது அவசியம். அதிகப்படியான உணவு உடல் நலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அளவுக்கு மீறி சாப்பிடுவதைத் தடுக்கும் ஆலோசனைகள் இங்கே…

ஒவ்வொருவருக்கும் இடையே உடலின் செயல்பாடு வித்தியாசப்படுவதால், பொதுவாக ஒரு அளவை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உங்கள் உடல்காட்டும் அறிகுறிகளை வைத்து, நீங்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறீர்களா என்பதை கண்டறியலாம்.

தேவைக்கு அதிகம் என்பதன் பொருள், உங்கள் உடலின் செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு போதுமான உணவின் அளவை மீறுவது என்பதாகும்.

நீங்கள் சாப்பிடும் உணவின் அளவு அதிகமாகும்போது, உங்கள் உடலே போதும் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டும். வயிறு நிறைந்தது போல் தோன்றும், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். உணவு போதும் என்று ஒதுக்கும் அளவைத் தாண்டி, அதிகமாகச் சாப்பிடும்போது ஆரோக்கியம் பாதிக்கும்.

சிலரால் அந்த அளவை கண்டுபிடிக்க முடியாததால் அதிகமாகச் சாப்பிடுவார்கள். சிலர் ஆசையால் அதிகம் சாப்பிடுவார்கள். எந்த காரணமாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சுதான். எனவே அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது என்று பார்க்கலாம்.

அளவாக சாப்பிடுதல்:

சாப்பிடும் தட்டின் அளவு சிறியதாக இருந்தால், குறைந்த அளவு உணவைப் பரிமாறினாலே உங்கள் தட்டு நிறைந்து விடும். இதனால் அதிகமாகச் சாப்பிடுவது போன்ற பிம்பம் உருவாகி வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதன் மூலம் அதிகமாகச் சாப்பிடுவதைக் குறைக்கலாம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை கொஞ்சமாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு தோன்றும். இதனாலும் சாப்பிடும் அளவு குறையும்.

உடலின் தேவையை அறிந்து சாப்பிடுங்கள்:

உடல் உணர்த்தும் குறிப்புகளை உற்றுக் கவனித்து அதனை புரிந்து கொண்டு சாப்பிட பழகுவது நல்லது. கட்டாயத்திற்காக சாப்பிடாமல் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

மெதுவாக சாப்பிடுங்கள்:

வயிறு நிறைந்துவிட்டதாக மூளைக்கு சமிக்ஞைகள் செல்வதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும். எனவே அவசர அவசரமாக கிடைப்பதை விழுங்காமல், மெதுவாக உணவை ருசித்து சாப்பிடுங்கள். இதனால் வயிறு நிறைந்த உணர்வு உண்டாகி அளவுக்கு மீறி சாப்பிடும் பழக்கம் மாறும்.

பிடித்தமான உணவாக இருந்தால் அதிகம் சாப்பிட விரும்பலாம். எனவே எந்த உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனித்து அந்த நேரங்களில் விழிப்புணர்வாக இருப்பது நல்லது.

சாப்பிடும்போது போன், டி.வி போன்றவற்றில் கவனத்தை சிதறவிட்டால் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதே தெரியாது. அளவிற்கு மீறி சாப்பிடுவதற்கு இந்த கவனச்சிதறல் ஒரு முக்கிய காரணியாகும்.


Next Story