புற்றுநோயாளிகளுக்கு புத்துயிரூட்டும் அஸ்வினி


புற்றுநோயாளிகளுக்கு புத்துயிரூட்டும் அஸ்வினி
x
தினத்தந்தி 9 April 2023 1:30 AM GMT (Updated: 9 April 2023 1:30 AM GMT)

புற்றுநோய் வந்தாலே 'இறந்து விடுவோம்' என்ற பயத்தில் இருப்பவர்களுக்கு, 'அவ்வாறு இல்லை, புற்றுநோயில் இருந்து மீள முடியும்' என்பதை புரிய வைக்கிறேன். இவ்வாறு நம்பிக்கை கொடுத்து, அவர்களிடம் நேர்மறை எண்ணங்களை அதிகரித்ததன் மூலம், நோய் முற்றிய நிலையில் இருந்தவர்கள் கூட கூடுதலாக சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.

"புற்றுநோய் வாழ்க்கையின் முடிவு அல்ல. அதில் இருந்து மீண்டு வர முடியும். புற்றுநோயைப் பற்றி மக்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு" என்கிறார் சென்னையில் வசிக்கும் அஸ்வினி. பாட்டு, ஓவியம், கணினியில் செயலிகளை மேம்படுத்துதல், ஜப்பானிய மாற்று மருத்துவ முறையான ரெய்கி ஹீலிங் செய்தல் என பன்முகத்திறமையோடு விளங்குகிறார் அஸ்வினி. சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து முழுவதுமாக மீண்டிருக்கும் இவர், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தி வருகிறார். அவரது பேட்டி.

"மென்பொருள் பொறியாளரான நான், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் டேட்டா சயின்டிஸ்ட் ஆக பணியாற்றுகிறேன். என்னுடைய கணவர் பாலாஜி ஜனார்த்தனம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு நான் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். அதைப் பற்றிய கவலையால் எனக்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்தன. வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். பிறகு என்னை நானே தேற்றிக் கொண்டு, புற்றுநோயில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன். புற்றுநோய்க்கான சிகிச்சை எடுக்க ஆரம்பித்தேன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது மாதத்தில் இருந்தே, மீண்டும் வேலைக்கு செல்லத் தொடங்கினேன். தொடர்ந்து எடுத்த சிகிச்சையின் மூலமாக 2018-ம் ஆண்டு புற்றுநோயில் இருந்து முழுவதுமாக மீண்டேன்.

இந்த மாற்றத்தை என்னைப்போல புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றவர்களிடமும் ஏற்படுத்த வேண்டும் என்று, சமூக வலைத்தளங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கினேன். புற்றுநோய் வந்தாலே 'இறந்து விடுவோம்' என்ற பயத்தில் இருப்பவர்களுக்கு, 'அவ்வாறு இல்லை, புற்றுநோயில் இருந்து மீள முடியும்' என்பதை புரிய வைக்கிறேன்.

இவ்வாறு நம்பிக்கை கொடுத்து, அவர்களிடம் நேர்மறை எண்ணங்களை அதிகரித்ததன் மூலம், நோய் முற்றிய நிலையில் இருந்தவர்கள் கூட கூடுதலாக சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். 'நான் நன்றாக இருப்பேன். மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ்வேன்' என்று தினமும் மனதுக்குள் சொல்ல வேண்டும். மற்ற நோய்களைப் போல இதுவும் குணமாகும் என்று நினைக்க வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் புற்றுநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகளையும், யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளையும் கற்றுத் தருகிறேன்".

உங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள், அங்கீகாரங்கள் பற்றி சொல்லுங்கள்?

இந்தியாவில் உள்ள முன்னணி புற்றுநோயியல் நிபுணர்களுடன் இணைந்து புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வையும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன். இதற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன. எனது யூடியூப் சேனல் நிகழ்ச்சியில், புற்றுநோய் விழிப்புணர்வு குறித்தும், அதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவம் குறித்தும் மூத்த புற்றுநோயியல் நிபுணர்கள் விளக்குவார்கள். புற்றுநோய் அறக்கட்டளை சார்பாக பல நிகழ்ச்சிகளில் நான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருக்கிறேன்.


Next Story