டைரி எழுதுபவர்கள் கவனத்துக்கு


டைரி எழுதுபவர்கள் கவனத்துக்கு
x
தினத்தந்தி 1 Jan 2023 1:30 AM GMT (Updated: 1 Jan 2023 1:31 AM GMT)

பின்னாட்களில் டைரியில் எழுதிய நிகழ்வுகளை எடுத்துப் பார்க்கும்போது, அது நம் நினைவுகளை திரும்பி பார்க்கும் விஷயமாகவும் அமையும்.

ம்மில் பலருக்கும் 'டைரி' எழுதும் பழக்கம் இருக்கும். பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்களிடம் கூட பகிராத விஷயங்களை டைரியில் எழுதி வைத்து ஆசுவாசம் அடைந்திருப்போம். அன்றாட நிகழ்வுகள், மனதுக்கு நெருக்கமான விஷயங்கள், நமது கோபம், மகிழ்ச்சி, பிடித்த நபர்கள் என அனைத்தையும் அப்போதைய உணர்ச்சிக்குவியலாக டைரியில் கொட்டித் தீர்ப்போம்.

'டைரி' என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. நம்மைத் தவிர அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டோம். சிலர் தங்களுடைய டைரிக்கு பெயர் வைத்து அதை நண்பர்கள் போலவும், 'பெட்' போலவும் நினைத்து மகிழ்வதும் உண்டு.

பின்னாட்களில் டைரியில் எழுதிய நிகழ்வுகளை எடுத்துப் பார்க்கும்போது, அது நம் நினைவுகளை திரும்பி பார்க்கும் விஷயமாகவும் அமையும்.

முன்பே சொன்னது போல டைரி என்பது நம்முடைய 'பர்சனல்'. அதனால், எந்தவித தயக்கமும், பயமும் இல்லாமல் இப்படித்தான், இதைத்தான் எழுத வேண்டும் என்ற எந்தவிதிமுறைகளையும் வரையறுக்காமல், முடிந்த அளவு இயல்பாகவும், உள்ளதை உள்ளபடியும் எழுதிப் பழகலாம்.

உங்கள் டைரி, உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதனால், அதில் எதை பகிர்ந்து கொண்டாலும் உங்களுக்கு உண்மையாக, வெளிப்படையாக பதிவு செய்யுங்கள். யாராவது இதைப் படிப்பார்களோ? நம்மைப் பற்றி ஏதாவது நினைப்பார்களோ? என்ற பயமோ, தயக்கமோ கொள்ளத் தேவையில்லை.

டைரி என்பது பேனா பிடித்து எழுதுவது என்பது மாறி, இப்போது டிஜிட்டல் டைரியும் பழக்கத்திற்கு வந்துவிட்டது. டிஜிட்டல் டைரி பழக்கம் கொண்டவர்கள் நினைவுகளுக்காக புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ போன்ற விஷயங்களை சேர்க்கலாம்.

அன்றாட நிகழ்வுகள், மனதிற்கு நெருக்கமான விஷயங்கள் என்றில்லாமல் நீங்கள் செய்து முடிக்க வேண்டியவை, அடைய வேண்டிய லட்சியங்கள், பயண விஷயங்கள், வரவு-செலவு கணக்கு, முக்கியமான தொலைபேசி எண்கள், பாஸ்வேர்ட், எண்ணங்கள் என எதையும் டைரியில் பகிரலாம்.


Next Story