'நீட்' அல்லாத படிப்புகளுக்கு இம்மாத இறுதியில் கலந்தாய்வு


நீட் அல்லாத படிப்புகளுக்கு இம்மாத இறுதியில் கலந்தாய்வு
x

நீட்’ அல்லாத படிப்புகளுக்கு, இந்த மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரி ருத்ரகவுடு தெரிவித்தார்.

புதுச்சேரி

'நீட்' அல்லாத படிப்புகளுக்கு, இந்த மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரி ருத்ரகவுடு தெரிவித்தார்.

'நீட்' அல்லாத படிப்பு

2023-24-ம் கல்வியாண்டிற்கான 'நீட்' அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளான பி.டெக், பி.எஸ்சி. (விவசாயம், நர்சிங்), பிசியோதெரபி, பி.பார்ம், பி.ஏ., எல்.எல்.பி.(சட்டம்) மற்றும் பட்டய படிப்புகள், இளங்கலை அறிவியல் மற்றும் வணிக படிப்புகள் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ.) மற்றும் இளநிலை நுண்கலை படிப்புகளில் மொத்தம் 10 ஆயிரத்து 848 இடங்கள் உள்ளன.

இந்த இடங்கள் அனைத்தும் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வருகிற 6-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாத இறுதியில் கலந்தாய்வு

விண்ணப்பிக்கும் இறுதி நாள் முடிவடைந்த பின்னர் சென்டாக் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடைபெறும்.

இது குறித்து சென்டாக் நிர்வாக அதிகாரி ருத்ரகவுடு கூறியதாவது:-

'சென்டாக்' மூலம் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாத இறுதியில் முதல் கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.

புதிய படிப்புகள் அறிமுகம்

இந்த கல்வியாண்டில் காரைக்காலில் உள்ள அன்னை அபிராமி சமுதாய சுகாதார அறிவியல் கல்லூரியில் புதிய படிப்பாக அனஸ்தீசியா டெக்னாலஜி, ஆபரேசன் தியேட்டர் டெக்னாலஜி, ஈ.சி.ஜி. மற்றும் டி.எம்.டி. டெக்னாலஜி படிப்புகள் அறிமுகமாகிறது. அதேபோல லாஸ்பேட்டை மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் அறிவியல் மற்றும் பொறியியல், கணினி அறிவியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற புதிய படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

ஆரோவில் இன்ஸ்டிடியூட் ஆப் அப்ளைடு டெக்னாலஜி கல்லூரியில் இந்த ஆண்டு பசுமை ஆற்றல் மற்றும் மின் அமைப்புகள், உற்பத்தி தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் தொடங்கப்பட உள்ளன'' என்றார்.


Next Story