எதிர்க்கட்சி தலைவர் யார்? காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீவிர ஆலோசனை


Congress Working Committee meeting
x
தினத்தந்தி 8 Jun 2024 8:44 AM GMT (Updated: 8 Jun 2024 9:28 AM GMT)

தேர்தலில் தோல்வி அடைந்த மாநிலங்களின் காரணங்கள் குறித்து தனியாக ஆய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், 'இந்தியா' கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பா.ஜ.க. தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி 3-வது பெரிய கட்சியாகவும் உள்ளன.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மூத்த எம்.பி.க்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:-

* காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்ட இடங்களில் எல்லாம் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

* ஆட்சியில் இருக்கிறோமோ, இல்லையோ மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க வேண்டும்.

* தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் மக்களின் முக்கிய பிரச்சினைகள்; இனி அவற்றை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ந்து விவாதிப்போம்

* கிராமப்புறம், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் காங்கிரசின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

நகர்ப்புறங்களிலிலும் வாக்கு சதவீதம் அதிகரிக்க உழைக்க வேண்டும்.

* காங்கிரஸ் தோல்வி அடைந்த மாநிலங்களின் காரணங்கள் குறித்து தனியாக ஆய்வு செய்யப்படும். இந்தியா கூட்டணி தொடர வேண்டும் என்பதே காங்கிரசின் எண்ணம்.

மேலும் இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் யார் என்பது குறித்து, அடுத்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் யார் என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக இருந்த சோனியா காந்தியே தற்போது தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களையும் உள்ளடக்கிய காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி எம்.பி.க்களுக்கு இன்று இரவு ஹோட்டலில் விருந்து அளிக்கிறார்.


Next Story