நாடு கடந்து ஒலிக்கும் நாதஸ்வர ஓசை


நாடு கடந்து ஒலிக்கும் நாதஸ்வர ஓசை
x

பண்டைய காலத்தில் இருந்து தற்போது வரையில் திருமணத்தின்போது மங்கள இசையான நாதஸ்வரம் இசைக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இசையை நேசிக்காதோர் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது. மனிதர்கள் மட்டுமல்ல, பல உயிரினங்களும் இசையை விரும்புவதை மறுப்பதற்கில்லை. இன்று இசையில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் பழமையான இசையான நாதஸ்வர இசைக்கு தனி மவுசு இருக்கிறது. அது கேட்பவர்களை மெய்மறக்க செய்யும் என்பதே நிதர்சனம். நாதஸ்வரமும் அதன் இணைய இசைக்கருவியான தவிலும் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்தவொரு மங்கள நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை.

பண்டைய காலத்தில் இருந்து தற்போது வரையில் திருமணத்தின்போது மங்கள இசையான நாதஸ்வரம் இசைக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. கிராம பகுதிகளில் நடக்கக்கூடிய கோவில் திருவிழாக்களிலும் மங்கள இசையான நாதஸ்வரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். இத்தகைய சிறப்பு வாய்ந்த, தெய்வீக இசைக்கருவி என கூறப்படும் நாதஸ்வரம் தோன்றி வளர்ந்தது சோழ நாட்டில் தான். அதனை உருவாக்குவதும் சோழ நாட்டில் தான் என்பது தமிழர்களுக்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம்.

இதனாலேயே நாதஸ்வரத்தை தமிழ் இசைக்கருவி என்று சொல்வார்கள். கலைகளைப் போற்றி வளர்க்கும் ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியில்தான் தவில், வீணை போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் கும்பகோணத்தை அடுத்துள்ள நரசிங்கம்பேட்டை, நாதஸ்வரம் தயாரிப்புக்கு புகழ் பெற்றது. அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பது குறித்து நாதஸ்வரம் தயாரிப்பாளர்கள் குணசேகரன், மணிகண்டன் ஆகியோரிடம் பேசினோம். அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இவை..

''நாதஸ்வரத்தில் ஸ்வரங்கள் வாசிக்கக்கூடிய துளைகளுடன் உள்ள பகுதியை உலவு என்று சொல்வார்கள். இது ஆச்சா மரத்தில் செய்யப்பட்டது. அந்த மரத்தை வெட்டிய உடன் நாதஸ்வரம் செய்ய முடியாது. அரை நூற்றாண்டுகளை கடந்த வீடுகளில் கதவு, ஜன்னல், தூண்கள் போன்றவற்றை ஆச்சா மரத்தை கொண்டுதான் தயார் செய்து இருப்பார்கள். அதனால் தான் அத்தகைய வீடுகளை சேர்ந்தவர்களிடம் ஆச்சா மரத்தை வாங்கிக்கொள்வோம். இதற்கு காரணம், ஒரு நல்ல நாதஸ்வரம் செய்வதற்கு பழமையான ஆச்சா மரம் தான் சிறந்ததாகும். ஆச்சா மரமானது கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தான் கிடைக்கிறது.

நாதஸ்வரத்தை சிலர் கைகளாலும், சிலர் எந்திரம் கொண்டும் தயார் செய்து வருகிறார்கள். அதிகபட்சமாக 3 அடி உயரத்திற்கும், குறைந்தபட்சமாக 1.5 அடி உயரத்திற்கும் நாதஸ்வரங்கள் தயார் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு நாதஸ்வரமாவது தயாரித்து விடுவோம். நாதஸ்வரம் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையாகிறது. எவ்வளவு தொழில் நுட்பங்கள் வளர்ந்தாலும் தற்போதும் நாதஸ்வரத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழர்கள் பாரம்பரியமாக வாழக்கூடிய பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் நாதஸ்வரம் வாங்கி செல்கின்றனர். சமூக வலைத்தளத்தின் தாக்கத்தால் நாதஸ்வரம் விற்பனை முந்தைய காலத்தை விட தற்போது அதிகமாக உள்ளது. சிறுவர்கள் கூட நாதஸ்வரத்தை வாங்கி கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்'' என்பவர்கள் நாதஸ்வரம் தயாரிப்புக்கு நரசிங்கம் பேட்டை பகுதி புகழ் பெற்றதற்கான காரணத்தை விவரிக்கிறார்கள்.

''தஞ்சை தவில் என்று சொல்வது போல் நாதஸ்வரம் என்றால் நரசிங்கம் பேட்டை தான். இந்த புகழ் வர காரணம் தலைமுறை, தலைமுறையாக நாங்கள் மேற்கொண்டுவரும் தயாரிப்பு முறைதான். 1 கட்டையில் இருந்து 6 கட்டை வரையிலான நாதஸ்வரம் உள்ளது. 1-1.5 கட்டை நாதஸ்வரம் ரெக்கார்டிங் செய்ய பயன்படுத்துகிறார்கள்.

தமிழ்நாட்டில் 99 சதவீத திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு 2-2.5 கட்டை நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். 4, 4.5, 5-6 கட்டை நாதஸ்வரம் சில தெருக்கூத்துகளிலும், நையாண்டி மேளம் போன்றவற்றிலும் பயன்படுத்துகிறார்கள். 5-6 கட்டைகளை தாண்டி முகவீனை உள்ளது. அதை சிவன் கோவில்கள் மற்றும் பெருமாள் கோவில்களில்தான் பயன்படுத்துகின்றனர்.

மொத்தமாக நாதஸ்வரத்தில் 12 துளைகள் இருக்கின்றன. மேலே இருக்கும் 7 துளைகள் ஸ்வரங்கள், பக்கவாட்டில் உள்ள இதர ஐந்தும் பக்க ஸ்வரங்கள் ஆகும். குழலின் நடுப்பாகத்தில் துளையிடுவது தான் மிகவும் கடினமானது. மிகவும் நுணுக்கமான முறையில் மனநிலையை சரியாக வைத்து செய்ய வேண்டும். இல்லையெனில் வீணாகி விடும். இதுபோன்று அனைத்தும் சரியான முறையில் அமைய வேண்டும்.

நாதஸ்வரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். ஜீவன்+வளி என்பது தான் சீவாளியாகி இருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது. இது ஒரு வகை நாணல் என்ற புல் வகையால் செய்யப்படும்.

பல தலைமுறைகளை கடந்து நமது பாரம்பரியத்தை பின்பற்றி வரும் நாதஸ்வரம் தயாரிப்பாளர்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கலாம். ஆனால் அரசு சார்பில் எந்தவொரு அங்கீகாரமும் இதுவரையில் கிடைக்கவில்லை.

பொதுவாக இசை கருவிகளை வாசிப்பவர்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் அறிவிக்கின்றனர். ஆனால் தலைமுறை, தலைமுறையாக பாரம்பரியத்தை பின்பற்றி வரும் நாதஸ்வர தயாரிப்பாளர்களுக்கு எந்த விருதும் வழங்கப்படுவதில்லை. உதவித்தொகையும் வழங்குவதில்லை. விருதும், உதவி தொகையும் உபகாரம் மட்டுமல்ல. நாதஸ்வர தயாரிப்பு கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வழிவகை செய்யும். நாதஸ்வரம் தயாரிப்பு கலையை அரசு சார்பிலும் கற்றுக்கொடுக்க வேண்டும்'' என்ற கருத்துடன் விடைபெற்றனர்.

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு

நாதஸ்வரத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்களான ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் உள்பட பலர் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை வாசித்துத்தான் புகழ்பெற்றனர். நரசிங்கம்பேட்டையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நாதஸ்வரம் தயார் செய்து வந்த நிலையில் தற்போது 4 குடும்பங்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி புவிசார் குறியீடு கேட்டு தஞ்சாவூர் இசைக்கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசை தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 8 ஆண்டுகள் போராடி கடந்த 2022-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.


Next Story