முலாம் பழ ரெசிபிகள்


முலாம் பழ ரெசிபிகள்
x
தினத்தந்தி 21 May 2023 1:30 AM GMT (Updated: 21 May 2023 1:30 AM GMT)

சுவையான முலாம் பழம் கிரனிதா, ராயல் முலாம் பழ பஞ்ச் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

முலாம் பழம் கிரனிதா

தேவையான பொருட்கள்:

முலாம் பழம் - 1 (நடுத்தர அளவு)

எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - 1 கப்

சர்க்கரை - ½ கப்

ஐஸ் கட்டிகள் - 8

செய்முறை:

முலாம் பழத்தை சுத்தம் செய்து, அதன் மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி ஆற வைக்கவும். பின்பு நறுக்கிய முலாம் பழம், எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை பாகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த கலவையை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாக மூடி, பிரீசரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, முள்கரண்டி கொண்டு அதை முழுவதுமாகக் கிளறவும். பின்னர் அந்த முலாம் பழக் கலவையை அழகான பவுலில் போட்டு, அதன்மேல் தேன் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.

ராயல் முலாம் பழ பஞ்ச்

தேவையான பொருட்கள்:

முலாம் பழம் - 1 (நடுத்தர அளவு)

மாம்பழம் - 1

பிரஷ் கிரீம் - ¼ கப்

வெண்ணிலா ஐஸ்கிரீம் - 4 ஸ்கூப்

சர்க்கரை - 2 மேசைக்கரண்டி

பால் - ½ கப்

புதினா இலைகள் - 6

அலங்காரத்திற்கு:

பாதாம், முந்திரி, பேரீட்சை, ரோஸ் சிரப், உலர்ந்த திராட்சை மற்றும் பிஸ்தா - தேவையான அளவு

செய்முறை:

முலாம் பழத்தின் மேல் பகுதியை மட்டும் வட்டமாக வெட்டி எடுத்து, அதன் உள்ளே இருக்கும் சதைப் பகுதியையும், விதைகளையும் டீஸ்பூன் கொண்டு தனித்தனியாக எடுக்கவும். இவ்வாறு எடுக்கும்போது பழத்தின் கூடு சேதம் அடையாமல் கவனமாகக் கையாளவும். பின்னர் பழத்தின் கூட்டை தனியாக எடுத்து வைக்கவும். முலாம் பழத்தின் சதைப்பகுதியில் பாதி அளவை மட்டும் மிக்சியில் போட்டு, அதனுடன் சர்க்கரை, புதினா இலைகள், பால் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் பிரஷ் கிரீம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பின்பு மாம்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். அவற்றை முலாம்பழ கூட்டில் முதல் அடுக்காக போடவும். தனியாக வைத்திருக்கும் முலாம் பழத்தின் சதைப்பகுதியை அடுத்த அடுக்காக போடவும். அதற்கு மேல் தயாரித்து வைத்திருக்கும் முலாம் பழக்கூழை ஊற்றவும். அதற்கு மேல் ஐஸ்கிரீம் போட்டு, பாதாம், முந்திரி, பேரீட்சை, உலர்ந்த திராட்சை மற்றும் பிஸ்தாவை தூவவும். கடைசியாக சில மாம்பழத் துண்டுகளைப் போட்டு, ரோஸ் சிரப் ஊற்றி அலங்கரித்தால் 'ராயல் முலாம் பழ பஞ்ச்' தயார்.


Next Story