கைகளில் வரைந்த மெகந்தியை நீக்கும் டிப்ஸ்


கைகளில் வரைந்த மெகந்தியை நீக்கும் டிப்ஸ்
x
தினத்தந்தி 27 Nov 2022 1:30 AM GMT (Updated: 27 Nov 2022 1:30 AM GMT)

வெதுவெதுப்பான தண்ணீர் மருதாணியின் மூலக்கூறுகளை தளர்ச்சி அடையச் செய்யும். எனவே கைகளை லேசான சூடுள்ள தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து மென்மையாக ‘ஸ்கிரப்' செய்யுங்கள். மருதாணி கறைகளை அகற்றுவதில் ஆலிவ் எண்ணெய் சிறப்பாக செயல்படும்.

பெண்கள் கைகளிலும், கால்களிலும் மருதாணி வைத்துக்கொள்வது பல காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. மருதாணி இலைகளுடன் மேலும் சில இயற்கையான பொருட்களைச் சேர்த்து, பக்குவமாக அரைத்து கைகளில் வைத்துக்கொள்வதற்கு தற்போது பலருக்கும் நேரமில்லை. அதனால் பெரும்பாலானவர்கள் மருதாணி கோன்களை நாடுகின்றனர்.

இதன் மூலம் வரையப்படும் 'மெகந்தி டிசைன்கள்' கண்களைக் கவரக் கூடியதாக இருக்கும். அதேசமயம் ஒன்றிரண்டு நாட்களிலேயே நிறம் திட்டுத்திட்டாக மங்கத் தொடங்கும். அதை சீக்கிரமே முழுவதுமாக நீக்குவதற்கு பலரும் விரும்புவார்கள். அதற்கான குறிப்புகளை இங்கே காண்போம்.

ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட சோப்புகள், இறந்த செல்களை நீக்கும் ஆற்றல் கொண்டவை. இவை கைகளில் படிந்துள்ள நிறங்களை விரைவாக மறையச் செய்யும். எனவே அடிக்கடி கைகளை ஆன்டி பாக்டீரியல் சோப் கொண்டு கழுவவும். பின்பு கைகளில் சிறிது தேங்காய் எண்ணெய்யைத் தடவவும்.

உப்பு சிறந்த சுத்தப்படுத்தியாகும். இது கைகளில் படிந்துள்ள நிறங்களை எளிதாக நீக்கும். ஒரு கிண்ணத்தில் உப்பு கலந்த தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். கைகளை அதில் மூழ்க வையுங்கள். 20 நிமிடம் கழித்து வெளியே எடுத்து பருத்தித் துணியால் ஈரத்தை ஒற்றி எடுங்கள். இவ்வாறு தினமும் ஒரு வேளை செய்துவந்தால் மருதாணி விரைவாக நீங்கும்.

முகத்துக்கு உபயோகிக்கும் ஸ்கிரப்பர் கிரீமை கைகளில் பூசி மென்மையாக 'ஸ்கிரப்' செய்யுங்கள். இதனால் கைகளில் வரைந்துள்ள மெகந்தி முழுவதுமாக நீங்கவில்லை என்றாலும், அதன் நிறம் நன்றாக மங்கி இருக்கும்.

வெதுவெதுப்பான தண்ணீர் மருதாணியின் மூலக்கூறுகளை தளர்ச்சி அடையச் செய்யும். எனவே கைகளை லேசான சூடுள்ள தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து மென்மையாக 'ஸ்கிரப்' செய்யுங்கள்.

மருதாணி கறைகளை அகற்றுவதில் ஆலிவ் எண்ணெய் சிறப்பாக செயல்படும். ஆலிவ் எண்ணெய்யுடன் சிறிது உப்பைக் கலக்கவும். இந்த எண்ணெய்யில் பஞ்சைத் தொட்டு கைகளில் மென்மையாகத் தேய்க்கவும். இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்பு சோப் போட்டு கைகளைக் கழுவவும். இவ்வாறு ஒரு நாளில் பல முறை செய்தால் மெகந்தி விரைவாக நீங்கும்.

எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மெகந்தியை விரைவாக நீக்கக்கூடியது. எலுமிச்சை சாற்றை நேரடியாக கைகளில் தடவலாம் அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் கைகளை சிறிது நேரம் மூழ்கி இருக்கச் செய்யலாம்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை இரண்டும் பிளீச் செய்யும் தன்மை கொண்டவை. இவை இரண்டையும் பசை போலக் கலந்து கைகளில் மெகந்தி வரைந்துள்ள இடங்களில் பூசவும். 10 நிமிடம் கழித்து ஸ்கிரப்பர் கொண்டு வட்ட இயக்கத்தில் மென்மையாக ஸ்கிரப் செய்யவும். பின்னர் இளஞ்சூடான நீரில் கைகளைக் கழுவவும். நகங்களில் படிந்துள்ள மெகந்தியை நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு எளிதாக அகற்றலாம்.


Next Story